பிள்ளைகளுடன் நேரம் செலவிடுங்கள் ஐ.எப்.எஸ்., தமிழ் அதிகாரி அறிவுரை
பிள்ளைகளுடன் நேரம் செலவிடுங்கள் ஐ.எப்.எஸ்., தமிழ் அதிகாரி அறிவுரை
UPDATED : ஆக 01, 2023 12:00 AM
ADDED : ஆக 01, 2023 09:54 AM
மைசூரு:
தயவு செய்து பிள்ளைகளுக்கு மொபைல் போன் தருவதை நிறுத்த வேண்டும். டிவி சீரியல்களை பார்க்காமல், பிள்ளைகளுடன் நேரத்தை செலவிட வேண்டும். இது மன வளர்ச்சிக்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், என ஐ.எப்.எஸ்., அதிகாரி மாலதி பிரியா பெற்றோருக்கு அறிவுரை கூறினார்.மைசூரு மாவட்டத்தில், எஸ்.எஸ்.எல்.சி., இரண்டாம் ஆண்டு பி.யு.சி., பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற தமிழ் மாணவர்களுக்கு, மைசூரு தமிழ் சங்கம் சார்பில், விஸ்வேஸ்வரா நகரில் உள்ள நோயல் வளாகத்தில் பாராட்டு விழா நடந்தது. சங்க தலைவர் பிரான்சிஸ் தலைமை வகித்தார். தமிழ் ஐ.எப்.எஸ்., அதிகாரியான மைசூரு மண்டல தலைமை வனக்காப்பாளர் மாலதி பிரியா, பாருக்யா பார்மசி கல்லுாரி முதல்வர் நிஷார் அகமது, சமூக சேவகர் ஹொனக்காண்டே ஆகியோர் பங்கேற்றனர். விழாவில் அதிக மதிப்பெண் பெற்ற, 25 தமிழ் மாணவ - மாணவியருக்கு சிறப்பு விருந்தினர்கள் ரொக்க பரிசு வழங்கி கவுரவித்தனர். ஐ.எப்.எஸ்., அதிகாரி மாலதி பிரியா பேசியதாவது:
மாணவர்கள் வெற்றியில் பெற்றோருக்கு பெரும் பங்கு உள்ளது. நேரம் இல்லை என்பதெல்லாம் பொய். என் வீட்டில், டிவியே இல்லை. டிவி சீரியல்களை பார்க்காமல், பிள்ளைகளுடன் நேரத்தை செலவிட வேண்டும். தயவு செய்து பிள்ளைகளுக்கு மொபைல் போன் தருவதை நிறுத்த வேண்டும். நாம் படிக்கும் காலத்தில் பெற்றோர் மிகவும் கண்டிப்புடன் வளர்த்தனர். இப்போது பிள்ளைகள் தான் நம்மை கண்டிக்கின்றனர். காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை குறைந்தபட்சம் நான்கு மணி நேரமாவது மொபைல் போன் பார்க்கின்றனர்.இதை தவிர்த்து விட்டு அவர்களுடன் விளையாடுங்கள்; பொழுது போக்குங்கள். இது மன வளர்ச்சிக்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மாணவர்களும், பெற்றோரும் யு.பி.எஸ்.சி., எனும் இந்திய குடிமை பணிகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். நம் பிள்ளைகளை அந்த தேர்வுக்கு தயாராக்கி, வாழ்க்கையில் வெற்றி பெற நல்ல முறையில் படிக்க வைக்க வேண்டும். இவ்வாறு படித்தால் மட்டுமே வெல்ல முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.பெற்றோர், தமிழ் ஆர்வலர்கள் உட்பட நுாற்றுக்கணக்கான தமிழர்கள், குடும்பத்துடன் பங்கேற்றனர். நிகழ்ச்சியை சங்க செயலர் ரகுபதி தொகுத்து வழங்கினார். மாணவ - மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது. தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் தமிழ் ஊழியர்கள் பலரும் ஆர்வத்துடன் வந்து தன்னார்வலராக செயல்பட்டனர்.
