ஆண்டு தோறும் நீதிபதி பணி தேர்வு: அரசுக்கு உயர் நீதிமன்றம் பரிந்துரை
ஆண்டு தோறும் நீதிபதி பணி தேர்வு: அரசுக்கு உயர் நீதிமன்றம் பரிந்துரை
UPDATED : ஆக 02, 2023 12:00 AM
ADDED : ஆக 02, 2023 10:16 AM
சென்னை:
நீதிபதிகள் பணிக்கான தேர்வை, ஒவ்வொரு ஆண்டும் நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.சிவில் நீதிபதிகள் பணிக்கான தேர்வு அறிவிப்பை, 2023 ஜூன் 1ல் அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. குறைந்தது மூன்று ஆண்டுகள் வழக்கறிஞராக, பிராக்டீஸ் செய்பவர்கள், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்; புதிதாக சட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால், தேர்வு அறிவிப்பு வெளியிட்ட தேதிக்கு முன், மூன்று ஆண்டுகளுக்குள் சட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தேர்வாணையத்தின் நிபந்தனைகளால் எங்களால் விண்ணப்பிக்க முடியவில்லை என, நீதிபதிகள் தேர்வு அறிவிப்பை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் நான்கு பேர் வழக்கு தொடர்ந்தனர்.அறிவிப்பு வெளியிட்ட தேதிக்கு முன், மூன்று ஆண்டுகளுக்குள் சட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை சட்டவிரோதமானது என்றும், கொரோனா பாதிப்பால் தேர்வு நடக்காததை கருத்தில் கொள்ளவில்லை என்றும் மனுக்களில் கூறப்பட்டது. மனுக்களை, நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், கே.ராஜசேகர் அடங்கிய அமர்வு விசாரித்தது. உயர் நீதிமன்ற பதிவுத்துறை சார்பில், வழக்கறிஞர் பி.விஜய்; தேர்வாணையம் சார்பில், வழக்கறிஞர் ஆர்.பரணீதரன் ஆஜராகினர்.நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
நீதிமன்றம் தலையிடும் வகையில், அடிப்படை உரிமைகள் எதுவும் மீறப்படவில்லை. கொரோனா பாதிப்பால் தேர்வு நடவடிக்கைகள் இல்லை என்ற வாதத்தை ஏற்றால், இதே கோரிக்கையுடன் ஏராளமானோர் நீதிமன்ற கதவுகளை தட்டும் நிலை ஏற்பட்டு விடும். அதனால், தேர்வு நடவடிக்கை முடிவடையாத நிலையாக மாறி விடும். கீழமை நீதிமன்றங்களில், 300 காலியிடங்கள் உள்ள போது, தேர்வு நடவடிக்கையை ஸ்தம்பிக்க வைக்க நாங்கள் விரும்பவில்லை. சிவில் நீதிபதி பணியிடங்கள் காலியாக இருப்பதால், சப் - ஜட்ஜ் ஆகவும், மாவட்ட நீதிபதியாகவும் பதவி உயர்வு கிடைப்பதில் பாதிப்பு ஏற்படுகிறது.அனுபவம் உடைய வழக்கறிஞர்களால் தான், நீதிபதிகளின் பணியை திறமையாக, உறுதியாக மேற்கொள்ள முடியும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அதனால், குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளாக வழக்கறிஞராக இருந்திருக்க வேண்டும் என ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. தாங்கள் விரும்பியபடி, வயது மற்றும், கட் - ஆப் தேதியை தளர்த்த மனுதாரர்கள் கோர முடியாது. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைப்பதை உறுதி செய்ய, ஒவ்வொரு ஆண்டும் நீதிபதிகள் தேர்வை நடத்த வேண்டும் என பரிந்துரைக்கிறோம். சில வழக்குகள், 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
