UPDATED : ஆக 02, 2023 12:00 AM
ADDED : ஆக 02, 2023 02:10 PM
பெங்களூரு:
புவி வட்டப் பாதையில் இருந்து விலகி, நிலவை நோக்கி சந்திரயான் - 3 செயற்கைக்கோள் வெற்றிகரமாக தன் பயணத்தை துவக்கியுள்ளது, நெக்ஸ்ட் ஸ்டாப் - நிலவு என, இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது.பூமியில் இருந்து, 3 லட்சத்து 84 ஆயிரத்து 400 கி.மீ., தொலைவில் உள்ள நிலவை ஆய்வு செய்யும் தன் மூன்றாவது முயற்சியில், இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் ஈடுபட்டுள்ளது. நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக, சந்திரயான் - 3 திட்டம் துவங்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 14ம் தேதி, சந்திரயான் - 3 செயற்கைக்கோள், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.இந்த செயற்கைக்கோள், புவி வட்டப் பாதையில் சுற்றி வந்தது. இதன் அடுத்தகட்டமாக, நிலவின் சுற்று வட்டப் பாதைக்கு செலுத்தும் முயற்சி நேற்று அதிகாலை நடந்தது. இதன்படி, புவி வட்டப் பாதையில் இருந்து செயற்கைக்கோள் விலகி, நிலவை நோக்கி தன் பயணத்தை துவக்கிஉள்ளது. வரும் 5ம் தேதி இது, நிலவின் சுற்று வட்டப் பாதையை அடையும். அதன்பின் 23ம் தேதி, நிலவில் தரையிறங்கும் முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது. சந்திரயான் - 3 புவி வட்டப் பாதை பயணத்தை முடித்து, நிலவை நோக்கி தன் பயணத்தை துவக்கிஉள்ளது. அதன், நெக்ஸ்ட் ஸ்டாப் - நிலவு என, இஸ்ரோ நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுஉள்ளது.
