தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பொது பாட திட்டத்தை அமல்படுத்த முடியாது என மறுப்பு

பொது பாட திட்டத்தை அமல்படுத்த முடியாது என மறுப்பு

பொது பாட திட்டத்தை அமல்படுத்த முடியாது என மறுப்பு


UPDATED : ஆக 03, 2023 12:00 AM

ADDED : ஆக 03, 2023 10:29 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 03, 2023 12:00 AM ADDED : ஆக 03, 2023 10:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அண்ணா பல்கலை வளாகத்தில் நடந்த கூட்டத்தில், சரமாரியாக கேள்விகளை எழுப்பியதால், அவர்களின் கோரிக்கையை அமைச்சர் பொன்முடி ஏற்றுக் கொண்டார். அரசு கலை, அறிவியல் பல்கலைகளில், ஒரே பொது பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என, தமிழக உயர்கல்வித்துறை அறிவித்தது. இதற்கு கல்வியாளர்கள், பல்கலை பேராசிரியர்களிடம் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, பல்கலை துணைவேந்தர்களை அழைத்து, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடந்த வாரம் பேச்சு நடத்தினார். பின், பேராசிரியர் சங்கங்களுடன் பேச்சு நடத்தப்பட்டது. இதையடுத்து, தன்னாட்சி கல்லுாரி முதல்வர்களுக்கான கருத்து கேட்பு கூட்டம், சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், 100க்கும் மேற்பட்ட தனியார் தன்னாட்சி கல்லுாரிகள் மற்றும் அரசு கல்லுாரிகளின் முதல்வர்கள், தாளாளர்கள் பங்கேற்றனர்.முரண்பாடுகள்
அப்போது, பெரும்பாலான கல்லுாரி முதல்வர்களும், தாளாளர்களும், அமைச்சரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பி, பொது பாடத்திட்டத்துக்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.அவர்கள் பேசியதாவது:
தன்னாட்சி என்ற அந்தஸ்தின்படி, பாடத்திட்டம் மற்றும் படிப்பு வகைகளை நிர்ணயிக்க, எங்களுக்கே உரிமை உண்டு. மத்திய அரசின் யு.ஜி.சி., சார்பில், 45 ஆண்டுகளாக இந்த அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அரசின் பொது பாடத்திட்டத்தில் நிறைய முரண்பாடுகள் உள்ளன. மேலும், பேராசிரியர்களின் கற்பித்தல் பணியும், நேரமும் சரியாக வரையறுக்கப்படவில்லை. மாணவர்களுக்கு வழங்கும், கிரெடிட் மதிப்பெண்ணில் வேறுபாடு உள்ளது. முக்கிய படிப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ள துணை படிப்புகள், பொருந்தாதவையாக உள்ளன. தொழில்துறை மற்றும் தற்போதைய வளர்ச்சிக்கு தேவையான பல அம்சங்கள் இடம் பெறவில்லை.பாடத்திட்டங்களுக்கு, போர்ட் ஆப் ஸ்டடீஸ் மற்றும் சிண்டிகேட் குழு, அனுமதி வழங்கவில்லை. அனைவரும் ஒரே பாடத்திட்டத்தை அமல்படுத்துவதால், தேசிய தரவரிசை பட்டியலில், தமிழக கல்லுாரிகள் பின்தங்கும். உயர்கல்வி படிப்புகளின் எண்ணிக்கை குறையும். உயர்கல்வியில் ஆரோக்கியமான கல்வி போட்டி இருக்காது. வெளிநாடுகளுடனான, தமிழக கல்லுாரிகளின் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் பாதிப்பு ஏற்படும். கல்லுாரிகள், தாங்களே தனித்தன்மையுடன் உருவாக்கும் படிப்புகளை நடத்த முடியாத சூழல் உருவாகும். இவ்வாறு அவர்கள் கருத்துகளை தெரிவித்தனர். இதில் ஒவ்வொரு கேள்விக்கும் அமைச்சர் பொன்முடியும், உயர்கல்வி செயலர் கார்த்திக்கும் அவ்வப்போது விளக்கம் அளித்தனர். பின், எந்த சந்தேகமானாலும், பேசி தீர்த்து கொள்ளலாம் என்றனர். இறுதியாக, இந்த பாடத்திட்டத்தை கல்லுாரி முதல்வர்கள் ஏற்றுக் கொள்வதாக நாங்கள் எடுத்துக் கொள்ளலாமா? என அமைச்சர் பொன்முடி கேட்டார். அப்போது, கல்லுாரி முதல்வர்கள் மவுனமாக இருந்தனர். சிலர் மட்டும் கைகளை உயர்த்தி, தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.அப்போது, சில தனியார் கல்லுாரி முதல்வர்கள் பேசியதாவது:
இது பன்முக கருத்துகளை பெற்று, விரிவாக மேற்கொள்ள வேண்டிய விஷயம். பல்வேறு முரண்பாடுகள் உடைய பாடத்திட்டத்தை, ஒரு கூட்டத்தில் விவாதித்து, அவசரமாக அமல்படுத்த முடியாது. இதை தன்னாட்சி கல்லுாரிகள் விரும்பவில்லை. கல்வி என்பது, மத்திய அரசுடன் இணைந்த பொது பட்டியலில் உள்ளது. யு.ஜி.சி., போன்ற மத்திய நிறுவனங்களின் விதிகளையும் பார்க்க வேண்டும். எனவே, நடப்பாண்டில் இந்த பாடத்திட்டத்தை அமல்படுத்த முடியாது. அதற்கு சாத்தியமில்லை.இவ்வாறு திட்டவட்டமாக பேசினர்.கட்டாயமில்லை
அதற்கு பெரும்பாலான கல்லுாரி முதல்வர்கள் கைதட்டி, தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இதையடுத்து, அமைச்சர் பொன்முடி பேசுகையில், இந்த ஆண்டில் பாடத்திட்டத்தை அமல்படுத்தியவர்களை விட்டு விடுங்கள். மற்றவர்கள் அடுத்த ஆண்டில் இருந்து அமல்படுத்துங்கள். அதற்குள் உங்கள் சந்தேகங்களுக்கு உயர்கல்வி மன்றத்தில் தீர்வு காணலாம். நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை, எனக் கூறி, கூட்டத்தை முடித்துக் கொண்டார். உயர்கல்வி மன்ற துணை தலைவர் ராமசாமி, உறுப்பினர் செயலர் கிருஷ்ணசாமி, கல்லுாரி கல்வி இயக்குனர் கீதா ஆகியோர், கூட்டத்தில் பங்கேற்றனர்.பாடத்திட்டம் பெயரில் குழப்பம்
தமிழக அரசின் புதிய பாடத் திட்டத்தை, பொது பாடத் திட்டமாகவே அமைச்சர் பொன்முடி குறிப்பிட்டு வந்தார். நேற்றைய கூட்டத்தில், சில இடங்களில், புதிய மாதிரி பாடத்திட்டம் என அவ்வப்போது மாற்றி கூறினார். அதனால், பாடத்திட்ட பெயரிலேயே குழப்பம் இருக்கிறதே... என, கல்லுாரி முதல்வர்கள் குழம்பினர்.நேற்றைய கூட்டத்தின்போது, பாடத்திட்டம் தயாரித்த பேராசிரியர்களின் பட்டியலை வாங்கி, அமைச்சர் பொன்முடி பார்த்தார். அப்போது, அங்கிருந்த அதிகாரிகளை பார்த்து, அவர் கூறியதாவது:
பாடத்திட்ட தயாரிப்புக்கு, பெரும்பாலும் சென்னை மற்றும் சுற்றுவட்டார கல்லுாரிகளில் இருந்தே பேராசிரியர்களை வரவழைத்து இருக்கிறீர்களே... மற்ற மாவட்டங்களில் பல்கலைகள், கல்லுாரிகளே இல்லையா? இதுவே உயர்கல்வி மன்றத்தின் தவறுதான். இனிமேல் இப்படி இல்லாமல், எல்லா மாவட்டங்களிலும் உள்ள பல்கலைகள், கல்லுாரிகளில் இருந்து பேராசிரியர்களை அழைத்து, பாடத்திட்டம் தயாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us