தொலைதுாரக் கல்வி இயக்ககத்தில் விண்ணப்பம் விற்பனை துவக்கம்
தொலைதுாரக் கல்வி இயக்ககத்தில் விண்ணப்பம் விற்பனை துவக்கம்
UPDATED : ஆக 07, 2023 12:00 AM
ADDED : ஆக 07, 2023 10:16 AM
சிதம்பரம்:
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதுாரக் கல்வி இயக்ககத்தில் 2023-24ம் ஆண்டிற்கான விண்ணப்பம் விற்பனை துவக்க விழா நடந்தது.இயக்குனர் சந்தோஷ்குமார் வரவேற்றார். பல்கலைக்கழக துணை வேந்தர் கதிரேசன் குத்துவிளக்கேற்றி விற்பனையை துவக்கி வைத்தார். தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ், சிண்டிகேட் உறுப்பினர்கள் அரங்கபாரி, அறிவுடைநம்பி சுதர்சன், புல முதல்வர்கள் விஜயராணி, கார்த்திகேயன், ராமசாமி அருள்செல்வி, மக்கள் தொடர்பு அதிகாரி ரத்தின சம்பத், பேராசிரியர் ரவிசங்கர், துணைவேந்தரின் நேர்முக உதவியாளர் பாக்கியராஜ், அலுவலர் வர குணபாண்டியன், பாலமுகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.துணைவேந்தர் கதிசேரன் கூறியதாவது;
2015ம் ஆண்டு, யு.ஜி.சி., அதிகாரிகள், பல்கலைக்கழக தொலைதுாரக்கல்வி பாடத் திட்டங்கள் ஏற்புடையது அல்ல என, அறிவித்து, 2015ல் இருந்து தொலைதுாரக்கல்வி படிப்புகளுக்கு தடை பெற்றிருந்தது. இருப்பினும், நீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில் தொடர்ந்து சேர்க்கை நடந்து வந்தது. அதன்பின் 2022ல் யு.ஜி.சி., படிப்புகளை தொடரக்கூடாது என உறுதியான அறிக்கை வழங்கியதால், 2022--23ல் சேர்க்கையை நிறுத்தி வைத்திருந்தோம். பின்னர், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி, 2015ல் இருந்து 2021 வரை சேர்ந்து பயின்ற மாணவர்களின் நலன் பாதுகாக்கப்படும் என்ற நிலை ஏற்பட்டு, 2023 மார்ச் மாதம் தொலைதுாரக்கல்வி இயக்கக படிப்புகளுக்கு அனுமதி பெற, பல்கலை கழக மானிய குழுவின் வழிகாட்டுதல்படி, விண்ணப்பித்திருந்தோம்.வழிகாட்டுதல் குழு ஆய்வு செய்து, இந்த கல்வி ஆண்டு முதல், 27 பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்புகள் தொடங்க அனுமதி வழங்கியுள்ளது. பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு பல்கலைக் கழக மானியக்குழு ஒப்புதல் வேண்டியதில்லை. எனவே, 98 பாடப்பிரிவுகளுக்கு பல்கலைக்கழக தொலைதுாரக் கல்வி இயக்ககம் இந்த ஆண்டு முதல் சேர்க்கை தொடங்கி உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படுகிறது. அடுத்த வாரத்திலிருந்து பல்கலைக் கழக வலைதளத்திலிருந்து தொலை துாரக்கல்வி இயக்கக படிப்புகளுக்கான விண்ணப்பங்களை பதிவு இறக்கம் செய்து கொள்ளலாம். தொலைதுாரக்கல்வி இயக்கத்தில் பி.எட்., பட்ட வகுப்பு தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் மொத்தம் 55 படிப்பு மையங்களில் விண்ணப்பங்களை பெறலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30ம் தேதி.இவ்வாறு அவர் கூறினார்.
