15 மொழிகளில் சங்க இலக்கியம்: விரைவில் வெளியிடுகிறார் பிரதமர்
15 மொழிகளில் சங்க இலக்கியம்: விரைவில் வெளியிடுகிறார் பிரதமர்
UPDATED : ஆக 07, 2023 12:00 AM
ADDED : ஆக 07, 2023 10:37 AM
சென்னை:
பிரதமர் மோடி விரைவில், 15 மொழிகளில் சங்க இலக்கியங்களை வெளியிடுவார் என செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குனர் சந்திரசேகர் பேசினார்.சென்னை மலையாள சமாஜத்தின், கவி சங்கமம் அமைப்பின் சார்பில், ஆயுர்வேத மருத்துவர் அய்யப்பன் கரியத், மலையாள மொழியில் கவிதை நடையில் மொழிபெயர்த்த, திருக்குறள் நுால் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. நுாலை வெளியிட்டு, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குனர் சந்திரசேகர் பேசியதாவது:
நான் செம்மொழி தமிழாய்வு நிறுவன இயக்குனராக பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் ஆகின்றன. நிறுவனம் சார்பில், 13 சங்க இலக்கிய நுால்கள் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன. அவற்றை, பிரதமர் மோடி வெளியிட்டு தமிழுக்கு பெருமை சேர்த்தார். மோடி, எந்த வெளிநாட்டுக்கு சென்றாலும் திருக்குறளை கூறி விளக்கம் அளிக்கிறார். செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தால், குஜராத்தி மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகம், அவரின் மேஜையில் இருக்கும். அவர் அதை முழுதும் படித்துள்ளார். தற்போது இந்த நிறுவனத்தால் மொழி பெயர்க்கப்பட்டுள்ள, 15 சங்க இலக்கிய நுால்களை விரைவில் பிரதமர் வெளியிடுவார். நாங்கள் ஏற்கனவே மலையாள மொழியில் திருக்குறளை வெளியிட்டுள்ளோம். அதில், திருக்குறள் தமிழ், ஆங்கில வடிவம் மற்றும் விளக்கமும் இடம் பெற்றுள்ளது. அய்யப்பன் கரியத் மொழி பெயர்த்துள்ள இந்த நுால், மலையாளம் மட்டுமே அறிந்தவர்கள், திருக்குறளை அறிந்து கொள்ளும் வகையில், கவிதை நடையில், எளிமையான அரிச்சுவடியாக உள்ளது. இதற்கு, மொழி பெயர்ப்புக்கான விருது கிடைக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.நுாலை பெற்ற, வாய்ஸ் ஆப் வள்ளுவர் அமைப்பின் இயக்குனர் ராஜேந்திரன் பேசுகையில், மலையாளிகள் தமிழை பேசவும், எழுதவும் அறிந்திருந்த நிலை இருந்தது. பின், சமஸ்கிருதம் கலந்து பேசும் நிலைக்கு மாறினர். என்றாலும், மலையாளிகள் திருக்குறளை அறியும் வகையில், இந்த நுால் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. திருக்குறள், மனித வாழ்க்கைக்கான கையேடு. அதைப்படித்தால் வாழ்க்கை அர்த்தம் பெறும்; ஆக்கம் பெறும்; இன்பம் பெறும், என்றார். நிகழ்ச்சியில், இம்ப்காப்ஸ் இயக்குனர் மீரா சுதீர், புலவர் விஜயலட்சுமி, சென்னை பல்கலை மலையாள துறை முன்னாள் துறைத் தலைவர் ராஜேந்திர பாபு, கவி சங்கமத்தின் ஆலோசகர் ரவீந்திர ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
