சென்னை பல்கலை வளர்ச்சிக்கு அரசு துணை நிற்கும்: ஸ்டாலின்
சென்னை பல்கலை வளர்ச்சிக்கு அரசு துணை நிற்கும்: ஸ்டாலின்
UPDATED : ஆக 07, 2023 12:00 AM
ADDED : ஆக 07, 2023 10:59 AM
சென்னை பல்கலை பட்டமளிப்பு விழாவில், அவர் பேசியதாவது:
பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும், பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என, பாடினார் மகாகவி பாரதியார். இதற்கு எடுத்துக்காட்டாக, ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவி வகிக்கிறார்; அவருக்கு வாழ்த்துக்கள். நம்நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகள் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், கிரி, நீலம் சஞ்சீவி ரெட்டி, வெங்கட்ராமன், அப்துல்கலாம் ஆகியோர், சென்னை பல்கலையில் படித்தவர்கள். நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ராமனும் இங்கு தான் படித்தார். நாட்டின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி உள்ளிட்ட பெண் ஆளுமைகளும், இங்கு படித்துள்ளனர். அண்ணாதுரை இங்கு தான் படித்தார். நானும், இந்த பல்கலையில் படித்தவன் என்பதால், சீனியர் மாணவராகவும், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன்.நவீன இந்தியாவின் வளர்ச்சிக்கு, சென்னை பல்கலை முக்கிய பங்காற்றி உள்ளது. நாட்டிலேயே, உயர்கல்வியில் தமிழகம் சிறந்து விளங்கும் மாநிலம். சிறந்த, 100 பல்கலைகளில், 21; சிறந்த, 100 கல்லுாரிகளில், 32; 100 ஆராய்ச்சி நிறுவனங்களில், 10; 200 இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 35 தமிழகத்தில் தான் உள்ளன. கடந்த, 100 ஆண்டுகளுக்கு முன், நீதிக்கட்சி ஆட்சியில் போட்ட விதை தான் இதற்கு காரணம். சென்னை பல்கலையின் மெரினா வளாகத்தில், 30 கோடி ரூபாய் மதிப்பில், நவீன வசதிகளுடன் புதிய விடுதிகள் கட்டப்பட்டு உள்ளன. சென்னையில் பல்கலையின் நுாற்றாண்டு விழா கட்டடமும், புது பொலிவுடன் சீரமைக்கப்பட உள்ளது. சென்னை பல்கலையின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும், நிதி ஆதார பெருக்கத்துக்கும், தமிழக அரசு துணை நிற்கும். பட்டம் வாங்கியவர்கள், வேலை கிடைத்த பின் படிப்பை நிறுத்தாதீர்கள்; தொடர்ந்து படியுங்கள். எதிர்காலத்தில் நாட்டுக்கும், தமிழகத்துக்கும் பெருமை தேடி தர வேண்டும்.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.மாணவர்கள் பெரிதாக கனவு காண வேண்டும்!
பட்டமளிப்பு விழாவில், கவர்னர் ரவி பேசியதாவது:
முந்தைய காலங்களில் இல்லாத வகையில், நாடு முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது. பொருளாதாரத்திலும், தொழில்துறையிலும் சர்வதேச அளவிலான வளர்ச்சியை எட்டியுள்ளது. இந்நிலையில், நாட்டின் அடுத்த கட்டத்தை கட்டமைக்கும் பொறுப்பு மாணவர்களுக்கு உள்ளது.மாணவர்கள் பெரிதாக கனவு காண வேண்டும். பெரிய லட்சியங்களை கொண்டு, இலக்கு நிர்ணயிக்க வேண்டும். அதற்கு தன்னம்பிக்கை முக்கியம். தன்னம்பிக்கையுடன் இருந்தால் எதையும் சாதிக்கலாம்.தமிழகம் அறிவுசார் அறிஞர்களின் இடமாக உள்ளது. எனவே, தமிழக மாணவர்கள் மாநிலத்தையும், நாட்டையும் சிறப்பாக கட்டமைக்க முடியும். பட்டம் பெற்ற மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.இவ்வாறு அவர் பேசினார்.
