UPDATED : ஆக 13, 2023 12:00 AM
ADDED : ஆக 13, 2023 10:20 AM
சென்னை:
கருணாநிதி நுாற்றாண்டு விழாவையொட்டி, பன்னாட்டு தமிழ் மொழி ஆராய்ச்சிக் கழகம், சென்னை வளர்ச்சிக் கழகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை, தமிழியல் மற்றும் பண்பாட்டுப் புலம் ஆகியவற்றின் சார்பில், ஒரு நாள் பன்னாட்டு முதல் உலகத் தமிழ் வளர்ச்சி மாநாடு நடத்தப்பட்டது.சென்னையில், திறந்தநிலைப் பல்கலையில் நடந்த மாநாட்டுக்கு, அப்பல்கலை துணை வேந்தர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாநாட்டை துவக்கி வைத்து, அமைச்சர் பொன்முடி பேசுகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும், தமிழ் மொழிப் பாடம் கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும். தமிழ் மொழிக்கும், தமிழ் இனத்திற்கும், தமிழகத்திற்கும், கருணாநிதி செய்த பணிகளை, நாம் என்றும் நினைவுகூர வேண்டும், என்றார்.அமைச்சர் மஸ்தான் பேசுகையில், எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற கொள்கையை, இந்தியா முழுதும் எடுத்து செல்லும் காலம் நெருங்கி வருகிறது. அதற்கு தமிழ் சொந்தங்கள் ஒன்றிணைவோம். உலகம் முழுதும் உள்ள தமிழர்களை ஒன்றிணைத்து, இந்தியாவை பாதுகாப்போம், என்றார். மாலையில், மாநாடு நிறைவு விழா நடந்தது. வி.ஐ.டி., பல்கலை வேந்தர் விஸ்வநாதன், தஞ்சாவூர் தமிழ் பல்கலை துணை வேந்தர் திருவள்ளுவன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் அருள் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநாட்டில், தமிழ் மொழி இலக்கியத்தின் பன்முக வளர்ச்சி நிலைகள்; கருணாநிதியின் தமிழ்ப் பணிகள் ஆகியவற்றை மதிப்பீடு செய்யும் வகையில், 105 ஆய்வுக் கட்டுரைகள், ஆறு அமர்வுகளில் படிக்கப்பட்டன. சென்னை வளர்ச்சிக் கழகம் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டன. பன்னாட்டுத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தலைவர் சம்பத் வரவேற்றார். திறந்தநிலைப் பல்கலை தமிழியல் மற்றும் பண்பாட்டுப் புலம் இயக்குனர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.
