ஆறு ஆண்டாக டயாலிசிஸ் செய்யும் மாணவி படிப்பில் அசத்தல்
ஆறு ஆண்டாக டயாலிசிஸ் செய்யும் மாணவி படிப்பில் அசத்தல்
UPDATED : ஆக 13, 2023 12:00 AM
ADDED : ஆக 13, 2023 10:49 AM
ஷிவமொகா:
பள்ளி குழந்தைகள் லேசான காய்ச்சல் ஏற்பட்டால் கூட, அதை சாக்காக வைத்து, பள்ளிக்கு விடுமுறை எடுக்க நினைப்பர். ஆனால் ஆறு ஆண்டுகளாக சிறுநீரக பாதிப்பால் அவதிப்படும் மாணவி, பி.யு.சி., தேர்வில் சாதனை படைத்து அசத்தி உள்ளார்.ஷிவமொகாவின் சாகர் குருவாரி கிராமத்தை சேர்ந்த ஸ்ரீதர் - சைலஜா தம்பதியின் மகள் ஸ்ரீநிதி, 18. உடல் ஆரோக்யத்துடன் பிறந்த இவருக்கு, ஆறாம் வகுப்பு படிக்கும் போது, அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. வாந்தி, காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டார். மருத்துவமனைக்கு சென்று உடல் பரிசோதனை செய்த போது, சிறுநீரகங்களில் பாதிப்பு இருப்பது தெரிந்தது. அப்போது இருந்து வாரத்திற்கு இருமுறை வீதம், ஆறு ஆண்டாக டயாலிசிஸ் சிகிச்சை பெறுகிறார். படிப்பு மீதான ஆர்வம் அதிகம். எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் 93 சதவீத மதிப்பெண் பெற்று அசத்தினார். அவினஹள்ளி கிராமத்தில் உள்ள, கல்லுாரியில் பி.யு.சி., படித்தார்.துணைத்தேர்வு
இரண்டாம் ஆண்டு படித்த போது, இறுதி தேர்வை எதிர்பார்த்து காத்து இருந்தார். ஆனால் அவரது வாழ்வில் விதி விளையாடியது. கடுமையான சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. ஒரு சிறுநீரகத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என்று டாக்டர்கள் கூறினர். அந்த நேரம் தேர்வும் நெருங்கி விட்டது. இதனால் ஸ்ரீநிதியை தேர்வுக்கு தயார் செய்வதா, அறுவை சிகிச்சைக்கு தயார் செய்வதா என்று, பெற்றோர் குழப்பத்தில் ஆழ்ந்தனர். கல்லுாரி ஆசிரியர் ஒருவர் பி.யு.சி., துணைத்தேர்வு எழுதலாம் என்று கூறினார். இதையடுத்து ஸ்ரீநிதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சையும் வெற்றிக்கரமாக முடிந்தது. அதன்பின் துணைத்தேர்வு எழுதியவர் 92 சதவீத மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றார். தற்போது சாகரில் கல்லுாரியில் படிக்கிறார்.ஐ.ஏ.எஸ்., தேர்வு
இதுகுறித்து ஸ்ரீநிதி தந்தை ஸ்ரீதர் கூறுகையில், எனக்கும் எனது மனைவிக்கும் சிறுநீரக பிரச்னை எதுவும் இல்லை. எனது மூத்த மகள் நலமாக உள்ளார். ஆனால் இளைய மகளுக்கு மட்டும், இந்த பிரச்னை ஏன் என்று தெரியவில்லை. எனது மகனுக்கும் சிறுநீரக பாதிப்பு உள்ளது. இரு குழந்தைகளுக்கும் சிகிச்சைக்கு என்று 40 லட்சம் ரூபாய் செலவு செய்து உள்ளேன். மாத்திரை வாங்க மட்டும், மாதம் 30,000 ரூபாய் தேவைப்படுகிறது. சிலரின் உதவியால் சமாளித்து வருகிறேன் என்றார். மாணவி ஸ்ரீநிதி கூறுகையில், உடல்நிலை பாதிப்பு இருந்தாலும், படிப்பு மீதான ஆர்வம் எனக்கு குறையவில்லை. தினமும் படித்ததால், தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்க முடிந்தது. ஐ.ஏ.எஸ்., தேர்வை எதிர்கொள்ள ஆசையாக உள்ளது, என்று தெரிவித்து உள்ளார். ஸ்ரீநிதிக்கு உதவி செய்ய விரும்புவோர் 94493 80619 என்ற, மொபைல் எண்ணுக்கு, போன் பே மூலம், நிதி உதவி அளிக்கலாம். இந்த மொபைல் எண் ஸ்ரீநிதியின் தந்தை ஸ்ரீதர் உடையது.- நமது நிருபர் -
