தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஸ்மார்ட் போர்டு திட்டத்திலும் வச்சிட்டாங்க கை!

ஸ்மார்ட் போர்டு திட்டத்திலும் வச்சிட்டாங்க கை!

ஸ்மார்ட் போர்டு திட்டத்திலும் வச்சிட்டாங்க கை!


UPDATED : ஆக 15, 2023 12:00 AM

ADDED : ஆக 15, 2023 04:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 15, 2023 12:00 AM ADDED : ஆக 15, 2023 04:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
கோவை மாவட்டத்தில், 32 அரசுப்பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட, ஸ்மார்ட் போர்டு திட்டத்தில், ரூ.30 லட்சத்திற்கும் மேல் ஊழல் நடந்திருப்பதாக, வெளியாகியுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை, கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட, 32 அரசுப்பள்ளிகளுக்கு, தலா ஒரு ஸ்மார்ட் போர்டு வீதம், தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 64 லட்சம் ரூபாய் செலவில், அ.தி.மு.க., எம்.எல்.ஏ., தாமோதரன் சமீபத்தில் வழங்கியுள்ளார். ஒரு ஸ்மார்ட் போர்டின் விலை, ரூ.2 லட்சமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதை தயாரித்த சென்னை, தி.நகரில் உள்ள, நிறுவனத்தின் விபரங்கள், தொடர்பு எண் குறித்த தகவல்கள், அந்தந்த பள்ளியில் வைக்கப்பட்டுள்ளன. இதே நிறுவனத்தை தொடர்பு கொண்டு, 30 ஸ்மார்ட் போர்டுகளுக்கான மதிப்பீடு கேட்கப்பட்டதில், ஒரு ஸ்மார்ட் போர்டு விலை, ஜி.எஸ்.டி., உடன் சேர்த்து, 1 லட்சத்து 5 ஆயிரமாக குறிப்பிடப்பட்டுள்ளதாக, பா.ம.க., கோவை மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி, ஆதாரங்களுடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.அசோக்ஸ்ரீநிதி கூறுகையில், கோவை மாவட்டத்தில், 32 அரசுப்பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் போர்டில் மட்டும், ரூ.30 லட்சத்துக்கு மேல் ஊழல் நடந்துள்ளது. ஒரு ஸ்மார்ட் போர்டு, 2 லட்சம் ரூபாயாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. இதேபோல், திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளிகளுக்கு சமீபத்தில், 306 ஸ்மார்ட் போர்டுகள், 7 கோடியே 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி கணக்கிட்டால், ஒரு ஸ்மார்ட் போர்டு விலை, 2 லட்சத்து 32 ஆயிரத்து 516 ரூபாய். ஆனால், உரிய நிறுவனத்தில் இருந்து கேட்கப்பட்ட கொட்டேஷன்படி, ஒரு ஸ்மார்ட் போர்டு விலை ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே.இதில், இன்டர்நெட், பராமரிப்பு செலவுகளை கணக்கிட்டால் கூட, ஒரு ஸ்மார்ட் போர்டுக்கு மட்டும் 50 முதல் 70 ஆயிரம் ரூபாய் வரை, ஊழல் நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தமிழகம் முழுக்க, அரசுப்பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் போர்டு திட்டத்திற்கு மட்டும், பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. இதேபோல், கல்வித்துறையில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு, கணக்கு காட்டப்படும் மதிப்பீட்டில், 50 சதவீதம் வரை, ஊழல் நடப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது, என்றார்.எம்.எல்.ஏ., பெற முடியாது
கிணத்துக்கடவு தொகுதி எம்.எல்.ஏ., தாமோதரனிடம் கேட்டபோது, தொகுதி மேம்பாட்டு நிதியை, எந்த எம்.எல்.ஏ.,வும் தொகையாக பெற முடியாது. பணிகளை மட்டும் குறிப்பிட்டு, கலெக்டர் அலுவலகத்தில் தெரிவிக்கப்படும். அது உரிய துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, டெண்டர் கோரப்பட்டு, பணிகள் முடிக்கப்படும். இத்திட்டத்தில், தனிப்பட்ட முறையில் நான் எந்த ஊழலிலும் ஈடுபடவில்லை, என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us