UPDATED : ஆக 17, 2023 12:00 AM
ADDED : ஆக 17, 2023 10:25 AM
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, சமீபத்தில், பள்ளி மாணவ - மாணவியர் சம்மதத்துடன் உடல் ரீதியான உறவு வைத்துக் கொள்வதற்கு காரணம், போக்சோ குறித்த விழிப்புணர்வு இல்லாததே என அம்மாநில உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்தது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, எஸ்.சி.இ.ஆர்.டி., எனப்படும், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில், உயர் நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தது.அப்போது, எஸ்.சி.இ.ஆர்.டி., தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியதாவது:
கேரளாவில், பள்ளி பாடத்திட்டத்தில், போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு பாடங்களை சேர்க்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான பாடப் புத்தகங்களை திறமையான நிபுணர்களை வைத்து உருவாக்கும் பணி விரைவில் துவங்கும். வரும் 2024 - 2025 கல்வி ஆண்டு முதல், 1, 3, 5, 6, 8 மற்றும் 9ம் வகுப்புகளில், போக்சோ விழிப்புணர்வு பாடங்கள் சேர்க்கப்படும். இந்த பாடங்கள் 2, 4, 7 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு, 2025 - 26 கல்வி ஆண்டில் சேர்க்கப்படும். இது தொடர்பாக, மாநிலத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பயிலரங்குகள் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
