UPDATED : ஆக 19, 2023 12:00 AM
ADDED : ஆக 19, 2023 10:48 AM
தச்சர், பொற்கொல்லர், காலணி தைப்பவர், தையல் கலைஞர், சிற்பி, கல் உடைப்பவர், பானை செய்வோர், கொத்தனார், பொம்மை கலைஞர்கள், முடி திருத்துவோர் உள்ளிட்ட, 18 வகை பாரம்பரிய தொழில் கலைஞர்களுக்கு, 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், கடனுதவி மற்றும் திறன் மேம்பாடு பயிற்சி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.திறன் பயிற்சிபலன் தரும்
பாபு, பூ மாலை தயாரிப்பவர், அவிநாசி:
பூ மாலை தயாரிக்கும் பணியில், 32 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறேன். முந்தைய ஆண்டுகளில் நாட்டுப்பூ அதிகளவில் கிடைத்தது; நிறைய பேர் மலர் சாகுபடியில் ஈடுபட்டு வந்தனர்; தற்போது உயர்ரக விதைகள் வாயிலாக பூ உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது; மலர் சாகுபடியில் ஈடுபடுவோரும் குறைவு. அதே நேரம், பூ மாலை தயாரிக்க ஆட்கள் கிடைப்பதில்லை; மலர் மாலைகளை நேர்த்தியாக, கலைநயத்துடன் வடிவமைக்கும் ஆர்வம், தற்போதைய இளைஞர்கள் மத்தியில் இல்லை. விஸ்வகர்மா திட்டத்தில், திறன் மேம்பாடு பயிற்சி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இளைஞர்கள், இளம் பெண்களுக்கு தொழில் ரீதியாக பூ மாலை தயாரிக்கும் பணி செய்யும் வாய்ப்பு உருவாகும். மலர் சாகுபடியையும் ஊக்குவிக்க வேண்டும்.பாட திட்டம் அவசியம்
ஜெகதீசன், மண்பானை கலைஞர், அலகுமலை:
பல தலைமுறையாக மண்பானை மற்றும் சிற்பம் செய்து வந்த நிலை தற்போது இல்லை. மண்பானை செய்வோரின் பிள்ளைகள், அத்தொழிலை கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை; வேறு வேலைகளுக்கு சென்று விடுகின்றனர். இத்தொழில் செய்வோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மண்பானை தொழிலை செய்ய ஆட்களும் கிடைப்பதில்லை. இதனால், முதலாளிகளே, தொழிலாளர்களாகவும் உள்ளனர். &'விஸ்வகர்மா&' திட்டம் வரவேற்கத்தக்கது; பொருளாதார நிலை மேம்பட உதவும். அதே நேரம், இதுபோன்ற கைவினை தொழில்களை, மாணவ, மாணவியர் ஆர்வமுடன் கற்கும் வகையில் பாட திட்டத்திலும் கொண்டு வந்தால், தலைமுறை தாண்டி தொழில் வளரும்.சிற்பக்கலை சிறக்கும்
குமாரவேல், ஸ்தபதி, திருமுருகன்பூண்டி :
எனக்கு தெரிந்து ஐந்து தலைமுறையாக இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். பூண்டியில், நுாற்றுக்கணக்கில் சிற்ப பட்டறைகள் உள்ளன; இங்கு செதுக்கப்படும் சிற்பங்கள், நாட்டின் பல்வேறு இடங்களுக்கும், பல்வேறு வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இங்கு செதுக்கப்படும் சிற்பங்களுக்கு, தனி மதிப்பும், மரியாதையும் உண்டு.தற்போதைய நிலையில், 10 சதவீதம் பேர் மட்டுமே பொருளாதார நிலையில் வசதியாக உள்ளனர்; பெரும்பாலானோர் முதலீடுக்கு கூட பணமின்றி சிரமப்படுகின்றனர். அரசு உதவினால் அவர்களும் மீண்டெழுவார்கள்; மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் வரவேற்கத்தக்கது; இதுவரை யாரும் அறிவித்திராத திட்டம்; தொழில் மேம்பட உதவும்.
