UPDATED : ஆக 19, 2023 12:00 AM
ADDED : ஆக 19, 2023 02:38 PM
சென்னை:
அரசு கல்லுாரிகளில் பி.எட்., படிப்புக்கான மாணவர் சேர்க்கை தாமதமாவதால், தனியார் கல்லுாரிகளில் அதிக கட்டணம் செலுத்தி, மாணவர் சேர்வது அதிகரித்துள்ளது.தமிழகத்தில், கல்லுாரி கல்வி துறையின் கீழ், 14 அரசு கல்வியியல் கல்லுாரி கள் மற்றும் ஏழு அரசு உதவி பெறும் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவற்றில், 3,000க்கும் மேற்பட்ட இடங்களில், கவுன்சிலிங் வழியே மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்த கவுன்சிலிங்கை, கல்லுாரி கல்வி இயக்குனரகம் சார்பில், சென்னையில் உள்ள லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு கல்லுாரி நடத்துவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங் தாமதமாகியுள்ளது. ஆனால், தனியார் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது.இதன் காரணமாக, அரசு கல்லுாரிகளில் இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ள மாணவர்கள் கூட, இடம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில், அதிக கட்டணம் செலுத்தி, தனியார் கல்லுாரிகளில் சேர வேண்டிய நிலையில் உள்ளனர்.இதுகுறித்து, பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் கூறியதாவது:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பி.எட்., கல்லுாரிகளில், பி.எட்., படிப்புக்கு மிக குறைந்த கட்டணம் செலுத்தினால் போதும்; கல்வி உதவித்தொகையும் கிடைக்கும். ஆனால், தனியார் கல்லுாரிகளில் ஆண்டுக்கு, 50,000 முதல், 1 லட்சம் ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டிஉள்ளது. எனவே, அரசு கல்லுாரிகளில் சேர, பட்டதாரிகள் பலர் காத்திருக்கின்றனர். ஆனால், இந்த ஆண்டு, பி.எட்., படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு இன்னும் துவங்கவில்லை. இதனால், தனியார் கல்லுாரிகளில் படிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு விண்ணப்ப பதிவையாவது, விரைந்து துவங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
