UPDATED : ஆக 20, 2023 12:00 AM
ADDED : ஆக 20, 2023 05:42 PM
சென்னை:
தமிழகத்தில் நேற்று நடந்த சிவில் நீதிபதிகள் தேர்வில், 10,000த்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று எழுதினர்.தமிழகத்தில் கீழமை நீதிமன்றங்களில், காலியாக உள்ள 245 சிவில் நீதிபதி பணியிடங்களுக்கான அறிவிப்பை, ஜூன் 1ல், டி.என்.பி.எஸ்.சி., எனும் அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இந்த பணியிடங்களுக்கு, ஜூன் 30ம் தேதியுடன் விண்ணப்பிக்கும் அவகாசம் முடிவடைந்தது. இதில், 6,031 ஆண்களும், 6,005 பெண்களும், மருவிய பாலினத்தவர் ஒருவர் என, மொத்தம் 12,037 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இவர்களுக்கான முதல் நிலை தேர்வு, நேற்று காலை 9:30 மணி முதல் 12:30 மணி வரை நடந்தது.சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, சேலம், தஞ்சாவூர், வேலுார், விழுப்புரம் ஆகிய, ஒன்பது இடங்களில், தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சென்னையில் 13 இடங்களில் அமைக்கப்பட்ட தேர்வு அறைகளில், 4,044 பேர் தேர்வு எழுதினர். திருவல்லிக்கேணி எம்.கே.டி.நேஷனல் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வு அறைக்கு சென்று, உயர் நீதிமன்ற நீதிபதி சுந்தர்மோகன் ஆய்வு செய்தார்.
