UPDATED : ஜன 13, 2010 12:00 AM
ADDED : ஜன 13, 2010 04:39 PM
கோவை: “ஒவ்வொரு மாணவரும் தங்கள் பகுதி எம்.எல்.ஏ., கவுன்சிலர் உள்ளிட்ட அனைத்து அரசியல்வாதிகளின் விபரங்கள் மற்றும் அரசியல் பற்றி அறிந்து வைத்திருக்க வேண்டும்,” என்று மாநகராட்சி தெற்கு மண்டலத் தலைவர் பைந்தமிழ் பாரி பேசினார்.
அவினாசிலிங்கம் மகளிர் பல்கலையில் ‘இளைஞர் தின விழா கொண்டாட்டம்’ நடந்தது. பல்கலை துணைவேந்தர் சரோஜா விழாவை துவக்கி வைத்தார்.
‘தேசிய அரசியலில் இளைஞர்களின் பங்கு’ என்ற தலைப்பில் தெற்கு மண்டலத் தலைவர் பைந்தமிழ் பாரி பேசுகையில், “இக்கால மாணவர்களுக்கு தங்கள் பகுதி கவுன்சிலர், எம்.எல்.ஏ.,க்களின் பெயர் கூட தெரிவதில்லை. இளைஞர்கள்தான் நாட்டின் நாளைய நம்பிக்கை. ஆகவே ஒவ்வொருவரும் அரசியல் போக்கு, தலைவர்களின் பெயர் விபரங்களை அறிந்து வைத்திருக்க வேண்டும்.
பகத்சிங், திருப்பூர் குமரன் உள்ளிட்ட இளைஞர்கள் அன்று போராடியதால்தான், இன்று நாம் சுதந்திரமான காற்றை சுவாசிக்கிறோம். இன்று பல அரசியல் கட்சிகள் இருந்தாலும் தி.மு.க., கட்சி மட்டுமே பெண்களின் முன்னேற்றத்தில் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. பெண்கள் இல்லை என்றால்அரசியல் இல்லை; நாடும் இல்லை. ஆகவே ஒவ்வொரு மாணவரும் அரசியலை அறிந்து வைத்திருக்க வேண்டும். வரும் உள்ளாட்சித் தேர்தலில் 50 சதவீத இடங்களை பெண்களுக்கு ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது,” என்றார்.
பிற்பகலில், ‘தேச வளர்ச்சியில் மகிழ்ச்சியான, ஆரோக்கியமான இளைஞர்களின் பங்கு’ பற்றி மனோதத்துவ நிபுணர் முகைதீன் பேசினார். பல்கலையின் மகளிர் கல்வி மைய இயக்குனர் லீலாவதி, ஹோம் சயின்ஸ் துறைத் தலைவர் தங்கமணி, துடியலூர் டவுன் பஞ்சாயத்து தலைவர் சுப்ரமணியம் மற்றும் மாணவியர், பேராசிரியைகள் பங்கேற்றனர்.
