தொட்டுவிடும் துாரத்தில் நிலவு தரையிறங்க தயாராகும் லேண்டர்
தொட்டுவிடும் துாரத்தில் நிலவு தரையிறங்க தயாராகும் லேண்டர்
UPDATED : ஆக 21, 2023 12:00 AM
ADDED : ஆக 21, 2023 10:12 AM
இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம், நிலவை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான் - 3 விண்கலத்தை ஜூலை 14ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக செலுத்தியது. இந்த விண்கலம் மூன்று பிரிவுகளை கொண்டதாகும். புரபல்ஷன் மாட்யூல் எனப்படும் உந்து கலன், லேண்டர் எனப்படும் நிலவில் தரையிறங்கும் சாதனம், ரோவர் எனப்படும் நிலவில் ஆய்வு செய்யும் வாகனம் அடங்கியதே சந்திரயான் - 3 விண்கலமாகும்.இதில் உந்து கலனுக்குள் லேண்டர் சாதனமும், லேண்டர் சாதனத்துக்குள் ரோவர் வாகனமும் இடம்பெற்றுள்ளன. பூமியின் சுற்று வட்டப் பாதையில் இருந்து, கடந்த 5ம் தேதி நிலவின் சுற்று வட்டப் பாதைக்கு சந்திரயான் - 3 விண்கலம் செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, சந்திரயான் - 3 விண்கலத்தில் இருந்து விக்ரம் என்று பெயரிடப்பட்டுள்ள லேண்டர் சாதனம் தனியாக பிரிந்தது. பிரக்யான் என பெயரிடப்பட்டுள்ள ரோவர் வாகனத்தை சுமந்துள்ள விக்ரம் லேண்டர் சாதனம் தற்போது நிலவை சுற்றி வருகிறது.நிலவில் இருந்து குறைந்தபட்சம் 25 கி.மீ., மற்றும் அதிகபட்சம் 134 கி.மீ., சுற்று வட்டப் பாதைக்குள் லேண்டர் சாதனம் நேற்று வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. நிலவில் இருந்து குறைந்தபட்சம் 30 கி.மீ., மற்றும் அதிகபட்சம் 100 கி.மீ., துாரத்தில் இருக்கும்போது லேண்டர் சாதனம் நிலைநிறுத்தப்பட உள்ளது. அதற்கேற்ப அதன் வேகம் குறைக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம் இந்த இலக்கை எட்டியதுடன், லேண்டர் சாதனத்தின் வேகம் மேலும் கட்டுப்படுத்தப்பட்டு, நிலவின் மேற்பகுதியில் மெதுவாக தரை இறக்க, இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர். முன்னதாக, நாளை மறுதினம் மாலை 5:45 மணிக்கு தரையிறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, மாலை 6:04 மணிக்கு தரையிறக்கப்பட உள்ளதாக இஸ்ரோ நேற்று தெரிவித்துள்ளது.ரஷ்யா முயற்சி தோல்வி!
சந்திரயான் - 3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பிய அதே நேரத்தில், ரஷ்யாவும் நிலவை ஆய்வு செய்வதற்காக, லுானா - 25 என்ற விண்கலத்தை செலுத்தியது. இம்மாதம் 10ம் தேதி அது செலுத்தப்பட்டது. கடந்த 1976க்குப் பின், ரஷ்யா சார்பில் நிலவுக்கு அனுப்பப்படும் முதல் விண்கலம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.சந்திரயான் - 3 விண்கலம், 23ம் தேதி தரையிறக்க திட்டமிடப்பட்டது. அதே நேரத்தில், 21 - 23ம் தேதிக்குள் லுானா - 25 விண்கலத்தை தரையிறக்க ரஷ்யா திட்டமிட்டிருந்தது.இந்நிலையில், தரையிறங்குவதற்கு முன், கடைசி கட்ட நிலவு சுற்று வட்டப் பாதையில் விண்கலத்தை செலுத்தும் முயற்சி நேற்று நடந்தது. இதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக, ராஸ்காஸ்மஸ் எனப்படும் ரஷ்ய விண்வெளி ஆய்வு மையம் அறிவித்தது.கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டு, லுானா - 25 விண்கலம், நிலவின் மேற்பகுதியில் மோதியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்யும் ரஷ்யாவின் முயற்சி தோல்வியில் முடிந்து உள்ளது.இதனால், சந்திரயான் - 3 திட்டத்தை உலக நாடுகள் பெரும் எதிர்பார்ப்புடன் கவனித்து வருகின்றன.நேரடி ஒளிபரப்பு!
இஸ்ரோ நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
சந்திரயான் - 3 திட்டம் நாடு முழுதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நம் நாட்டின் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், தொழில் துறை வெற்றியின் அடுத்தகட்டமாக இது பார்க்கப்படுகிறது. விண்வெளி ஆய்வில் நம் நாட்டின் முன்னேற்றத்தையும் குறிப்பிடு வதாக இந்த திட்டம் அமைய உள்ளது.நம் நாடு குறித்த ஒரு பெருமிதம், ஒற்றுமையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதால், லேண்டர் சாதனம் நிலவில் தரையிறங்கும் நிகழ்வை நாட்டு மக்கள் நேரலையில் பார்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இஸ்ரோவின் இணையதளம், யு டியூப் சேனல், பேஸ்புக் பக்கத்தில் நேரடியாக பார்க்கலாம். மேலும், துார்தர்ஷனும் நேரடியாக ஒளிபரப்ப உள்ளது. நாளை மறுதினம் மாலை 5:27 மணியில் இருந்து பார்க்கலாம்.லேண்டர் சாதனம் நிலவில் தரையிறங்கும் நிகழ்வை, பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் பார்ப்பதற்கான வசதியை, கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்தி தர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
