UPDATED : ஆக 23, 2023 12:00 AM
ADDED : ஆக 23, 2023 09:25 AM
பெ.நா.பாளையம்:
கோவை வேளாண் துறையின், மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் வாயிலாக, வேளாண் தொழில் முனைவோர் திட்டத்தில் சேர்ந்து பயனடைய, வேளாண் பட்டதாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.வேளாண்மையில் பட்டப் படிப்பு முடித்த இளைஞர்களை கொண்டு, வளர்ந்து வரும் தொழில்நுட்ப அறிவை வேளாண்மையில் ஈடுபடுத்தி, இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்குதல் திட்டம் 2021 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் முடித்த பட்டதாரி இளைஞர்கள், உணவு பதப்படுத்தும் திட்டம் அல்லது வேளாண்மை உள் கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் நிதி உதவி பெற்று, வங்கி கடனுடன் வேளாண் சார்ந்த தொழிலை புதிதாக தொடங்கலாம். வேளாண் பட்டதாரிகளுக்கு சிறப்பு முன்னுரிமை வழங்கப்படுகிறது.திட்டத்தின் வாயிலாக கிடைக்கும் நிதியுதவி, வட்டி, மானியம் போக, கூடுதல் மானியமாக விரிவான திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மொத்த திட்ட மதிப்பீட்டில், 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ஒரு லட்சம் வரை வங்கி கடன் பெற்ற பின், பின்னேற்ப்பு மானியமாக வழங்கப்படுகிறது.திட்டத்தில் பங்கேற்க பயனாளிகளுக்கு, 21 முதல் 40 வயதுக்குள் இருக்கலாம். வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் பிரிவில் குறைந்தபட்சம் இளநிலை பட்டப்படிப்பு முடித்தவராகவும், அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியாதவராகவும் இருக்க வேண்டும். கம்ப்யூட்டரை கையாள தெரிந்த மற்றும் குடும்பத்திற்கு ஒரு வேளாண் பட்டதாரி மட்டுமே நிதி உதவி பெற தகுதி உடையவர்.திட்டத்தில் இணைய, 10, பிளஸ் 2 வகுப்பு சான்றிதழ், பட்டப்படிப்பிற்கான சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, தொடங்க உத்தேசித்துள்ள வேளாண் தொழில் தொடர்பான விரிவான திட்ட அறிக்கை, வங்கி கணக்கு புத்தகம், வங்கியிடம் இருந்து பெறப்பட்ட கடன் ஒப்புதல் ஆவணம் ஆகியவை சமர்ப்பிக்க வேண்டும். பதிவு செய்ய விருப்பம் உள்ள பட்டதாரிகள், அக்ரிஸ் நெட் எனும் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். தங்களின் விரிவான திட்ட அறிக்கையை, தொடர்புடைய வட்டார வேளாண் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.கூடுதல் விபரங்களுக்கு, வேளாண் இணை இயக்குனர், வட்டார வேளாண் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.
