UPDATED : ஆக 23, 2023 12:00 AM
ADDED : ஆக 23, 2023 09:32 AM
பெங்களூரு:
கல்யாண கர்நாடகா பகுதியில் உள்ள ஏழு மாவட்டங்களில், 19,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதால், உடனடியாக இவற்றை நிரப்ப வேண்டும் என கல்யாண் கர்நாடகா மண்டல வளர்ச்சி ஆணையம், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.கர்நாடகாவில் பல அரசு பள்ளிகள், மாணவர்கள் பற்றாக்குறையால் மூடப்பட்டு வருகின்றன. இதை தடுக்க, கன்னட எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் முயற்சிகள் எடுத்து வருகின்றனர். மறுபக்கம் ஆசிரியர்கள் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது.இந்நிலையில், கல்யாண கர்நாடக மண்டல வளர்ச்சி ஆணையம், அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
கல்யாண கர்நாடகா மண்டலமாக கருதப்படும் பீதர், கலபுரகி, ராய்ச்சூர், யாத்கிர், பல்லாரி, விஜயநகரா, கொப்பால் மாவட்டங்களில் மொத்தம் 60,988 ஆசிரியர் இடங்கள் உள்ளன. இதில், தொடக்க பள்ளியில் 15, 698 இடங்களும்; உயர்நிலைப் பள்ளியில் 3,309 ஆசிரியர்கள் இடங்களும் என மொத்தம் 19,007 இடங்கள் காலியாக உள்ளன. இதனால், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்து வருவது, கவலை அளிக்கிறது. ஆசிரியர் பணியிடங்கள் தவிர, 241 தலைமை ஆசிரியர்கள், எட்டு பி.இ.ஓ., எனும் பிளாக் கல்வி அதிகாரி பணியிடங்களும் காலியாக உள்ளதாக, கல்வி துறை இணை கமிஷனர் அலுவலக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.ஒவ்வொரு ஆண்டும் எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பி.யு.சி., தேர்வு முடிவுகளில் கலபுரகி, யாத்கிர் மாவட்டங்கள் கடைசி இடத்துக்கு வருகின்றன. இதற்கு ஆசிரியர் பற்றாக்குறையே காரணம். கல்யாண கர்நாடகாவின் ஏழு மாவட்டங்களில், எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்கள் தேர்ச்சி விகிதம் கடந்த 2022ல், 87 சதவீதமாக இருந்தது. 2023ல் 82 சதவீதமாக குறைந்து உள்ளது. அதுபோன்று பி.யு.சி., தேர்வில் 2022ல், 81 சதவீதமாக இருந்தது, 2023ல் 73 சதவீதமாக சரிந்துள்ளது. தற்போது அரசு இடமாறுதல் பணியை துவக்கி உள்ளதால், நடப்பாண்டு அதிகளவில் ஆசிரியர்கள் இடமாற்றம் செய்ய வாய்ப்புள்ளது. அதுபோன்று பலர் ஓய்வு பெற உள்ளனர். இதனால் ஆசிரியர் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும்.மாணவர்களுக்கு கணிதமும், அறிவியலும் முக்கியமான பாடங்களாகும். ஆசிரியர்கள் இருந்தும் மாணவர்கள் தேர்வில் தோல்வியடைகின்றனர். இவ்வேளையில் ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டால், இப்பாடங்களில் மாணவர்கள் எப்படி தேர்ச்சி பெறுவர். முழு நேர ஆசிரியர்கள் இல்லா விட்டாலும், கவுரவ ஆசிரியர்களை நியமித்து, அவர்களுக்கு ஊதியம் அதிகரித்து வழங்க வேண்டும். இவ்வளவு இடங்கள் காலியாக உள்ளதால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிவிடும் என கல்வி வல்லுநர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். எனவே, கல்யாண கர்நாடகா மண்டலத்தில் உடனடியாக காலியான இடங்களுக்கு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அதுவரை கவுரவ ஆசிரியர்களை இப்பதவியில் நியமிக்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
