மருத்துவ ஆராய்ச்சி கட்டுரை தமிழில் மொழி பெயர்க்க திட்டம்
மருத்துவ ஆராய்ச்சி கட்டுரை தமிழில் மொழி பெயர்க்க திட்டம்
UPDATED : ஆக 24, 2023 12:00 AM
ADDED : ஆக 24, 2023 09:14 AM
சென்னை கிண்டியில் உள்ள, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை வளாகத்தில், பொது சுகாதாரத்துறை டாக்டர்கள் மேற்கொண்ட, 40 ஆராய்ச்சிக் கட்டுரைகள், நேற்று வெளியிடப்பட்டன. தொடர்ந்து, ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, பல்கலையுடன், பொது சுகாதாரத்துறை புரிந்துணர்வு ஒப்பந்தமும் போட்டு உள்ளது.இந்நிகழ்வில், அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:
பொது சுகாதாரத்துறை, 100 ஆண்டு பழமையான துறையாக செயல்பட்டு வருகிறது. இத்துறையில், 100 ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, 40 ஆராய்ச்சிக் கட்டுரைகள் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளன. தொடர்ந்து மீதமுள்ள ஆராய்ச்சிக் கட்டுரைகளும் விரைவில் வெளியிடப்பட உள்ளன. அவ்வாறு, 100 ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியிடப்பட்ட பின், அவை, தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, ஆரம்ப சுகாதார நிலையம் முதல் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள் வரை, வழிகாட்டு புத்தகமாக வழங்கப்படும். அத்துடன், மருத்துவ பல்கலை வளாகத்தில், 50 கோடி ரூபாய் மதிப்பில் ஆராய்ச்சிக்கான கட்டடம் விரைவில் அமைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, மருத்துவ பல்கலை துணை வேந்தர் நாராயணசாமி, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
