UPDATED : ஆக 25, 2023 12:00 AM
ADDED : ஆக 25, 2023 10:54 AM
தமிழகத்தில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அதேபோன்று, புதுச்சேரியிலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்த பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர்.அமைச்சரவை பரிந்துரை
இதனையடுத்து, புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.ஏ.எம்.எஸ்.,(ஆயுர்வேதம்) ஆகிய மருத்துவ படிப்புகளில் 10 சதவீத உள்இட ஒதுக்கீடு வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.தொடர்ந்து அமைச்சரவையிலும் ஒப்புதல் அளித்து, அக்கோப்பு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கவர்னரும் ஒப்புதல் அளித்து, மத்திய உள்துறை அமைச்சருக்கு அனுப்பி வைத்தார்.மத்திய அரசு மவுனம்
கோப்பு அனுப்பி ஒரு மாதமான நிலையில், பல்வேறு சந்தேங்களை எழுப்பி விளக்கம் பெற்ற மத்திய உள்துறை, பதில் அளிக்காமல் மவுனம் காத்து வருகிறது. கவர்னர், முதல்வர் முயற்சி எடுத்தும் எந்த தகவலும் இல்லை.இந்நிலையில், தலைமை செயலர் ராஜிவ் வர்மா கடந்த சில நாட்களாக டில்லியில் உள்ள மத்திய உள்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு இறுதி முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அது எந்தளவிற்கு பலனிக்கும் என்பது தெரியவில்லை. அதனால், இந்தாண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்குமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.மாணவர்களுக்கு நெருக்கடி
தேசிய மருத்துவ ஆணைய உத்தரவின்படி முதற்கட்ட கலந்தாய்வுஜூலை-20ம் தேதி துவங்கி, ஆகஸ்ட்-6ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 9 ம் தேதி துவங்கி வரும் 30ம் தேதிக்குள்ளும், மூன்றாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 31ம் தேதி துவங்கி, செப்டம்பர் 20 ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இறுதி கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 21ம் தேதி துவங்கி,அம்மாதம் 30ம் தேதியுடன் நிறைவு செய்ய வேண்டும்.இதன்படி அகில இந்திய அளவில் முதற்கட்ட கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது. ஆனால், புதுச்சேரியில் இதுவரை கலந்தாய்வே துவங்கவில்லை. அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்தால் கூட ஒரு மாத காலத்திற்குள் மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டிய நெருக்கடி சென்டாக்கிற்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் பெரும் பரிதவிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.எல்லாம் தலைகீழ்
எப்போதும் எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு தான் முதலில் கவுன்சிலிங் நடத்தப்படும். அதில், சீட் கிடைக்காவிட்டால், இன்ஜினியரிங், துணை மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர்ந்து விடுவர். ஆனால், தற்போது தலைகீழாக இன்ஜினியரிங், கலை அறிவியல் படிப்புகளுக்கு முதலில் கவுன்சிலிங் நடத்தப்பட்டுள்ளது. இதனால் எம்.பி.பி.எஸ்., சீட்டிற்காக காத்திருக்கும் மாணவர்கள், அதில் சீட் கிடைக்காவிட்டால், இன்ஜினியரிங், கலை அறிவியல், துணை மருத்துவ படிப்புகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை காரணம் காட்டி, மருத்துவ மாணவர் சேர்க்கையை காலம் தாழ்த்தினால், இந்தியாவில் வேறு மருத்துவ கல்லுாரிகளிலும் இம்மாணவர்கள் சேர முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுவர்.மத்தியிலும், மாநிலத்திலும் வெவ்வேறு கட்சிகள் ஆட்சியில் இருந்ததால் முன்பு அனுமதி கிடைக்கவில்லை. தற்போது, மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜ., கூட்டணி அரசுகள் தான் உள்ள நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத ஒதுக்கீடு உண்டா? இல்லையா? என்பதை கேட்டறிவதில் ஏன் தாமதமாகிறது என்பது பெற்றோரின் ஒருமித்த கேள்வியாக உள்ளது.இவ்விஷயத்தில் மாநில அரசு மேலும் காலம் கடத்தி மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடாமல் விரைந்து முடிவெடுக்க வேண்டும்.
