UPDATED : ஆக 25, 2023 12:00 AM
ADDED : ஆக 25, 2023 05:49 PM
புதுடில்லி:
நிலவில் ஒரு நாள் என்பது, பூமியை பொறுத்தவரை 14 நாட்களாகும். விக்ரம் லேண்டர் தரை இறங்கிய தினமான ஆக., 23ம் தேதி, நிலவில் சூரியன் உதித்தது. ஒரு நிலவு நாளுக்கு பிறகு சூரியன் அஸ்தமனம் ஆகும். ஆனால், பூமியை பொறுத்தவரை 14 நாட்கள். இந்த 14 நாட்களில் ரோவர் ஆய்வுப் பணியை மேற்கொள்ளும்.நிலவில் சூரியன் அஸ்தமனம் ஆனதும் அங்கு வெப்ப நிலை, மைனஸ் 180 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு குறைகிறது. இது தொழில்நுட்ப உபகரணங்களை உறைய செய்து, உபயோகமற்றதாக மாற்றிவிடும். எனவே தான், சூரிய உதயத்தின் சுழற்சியை கணக்கிட்டு, லேண்டர் தரை இறங்க வேண்டிய நாள் மற்றும் நேரம் முடிவு செய்யப்பட்டது.நிலவில் தரை இறங்கியுள்ள லேண்டர் மற்றும் ரோவர் கலன்கள் சூரிய சக்தியில் செயல்படக் கூடியவை. 14 நாட்கள் ஆய்வுக்கு பின், சூரியன் மறைந்ததும், இந்த இரண்டு கலன்களும் செயல் இழந்துவிடும். அதற்கடுத்து, 14 பூமி நாட்களுக்கு பின் நிலவில் மீண்டும் சூரியன் உதிக்கும் போது, லேண்டர் மற்றும் ரோவர் கலன்கள் மீண்டும் உயிர் பெறவும் வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதிர்ஷ்டவசமாக அவ்வாறு நடந்தால், மேலும் 14 நாட்களுக்கு ஆய்வு தொடரும் என்றும் கூறப்படுகிறது.ஆய்வு எதற்கு?
நிலவின் தென் துருவப் பகுதியை ஆய்வுக்காக தேர்ந்தெடுத்த காரணம் குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியதாவது: நிலவின் தென் துருவத்தில், சூரிய வெளிச்சம் மிகக் குறைவாக இருக்கும். எனவே, அங்கு அறிவியல் மூலக்கூறுகள் அதிக அளவில் இருக்க வாய்ப்புள்ளது. நிலவில் குடியேற வேண்டும் என்பது மனிதகுலத்தின் கனவாக இருப்பதால், தென் துருவத்தில் மனிதன் உயிர் வாழ தேவையான கூறுகள் உள்ளதா என்பதை ஆய்வு செய்வதில் விஞ்ஞானிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.உலக தலைவர்களுக்கு பிரதமர் நன்றி!
சந்திரயான் - 3 திட்டம் வெற்றி பெற்றதற்கு, பல்வேறு நாட்டு தலைவர்களும் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். அவர்கள் அனைவருக்கும் தன் சமூக வலைதளம் வாயிலாக பிரதமர் நன்றி தெரிவித்தார். அதில் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் மேம்பாட்டுக்காக இந்தியா தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, அதன் வழியாக புதிதாக கற்றுக் கொள்வதுடன் அவற்றை பகிர்ந்து கொள்ளும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
