கருணாநிதி நூற்றாண்டு விழா போட்டி: ஆசிரியர் தின நிகழ்ச்சிகளுக்கு சிக்கல்
கருணாநிதி நூற்றாண்டு விழா போட்டி: ஆசிரியர் தின நிகழ்ச்சிகளுக்கு சிக்கல்
UPDATED : ஆக 26, 2023 12:00 AM
ADDED : ஆக 26, 2023 10:59 AM
சென்னை:
கருணாநிதி நுாற்றாண்டு விழா போட்டிகளை, பள்ளிகளில் இந்த வாரம் நடத்த திடீரென உத்தரவிட்டுள்ளதால் ஆசிரியர் தின நிகழ்ச்சி ஏற்பாட்டுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நுாற்றாண்டு பிறந்தநாள், அரசு சார்பில், கருணாநிதி நுாற்றாண்டு விழாவாக நடத்தப்படுகிறது. இதையொட்டி, பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆக., 30 மற்றும், 31ம் தேதிகளில், பல்வேறு போட்டிகளை, பள்ளிகள் மற்றும் வட்டார அளவில் நடத்த வேண்டும் என, முதன்மை கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.அதேபோல், 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கும், தனித்தனி தேதிகளில், வட்டார அளவில் போட்டிகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், ஆசிரியர் தின நிகழ்ச்சிகளின் ஏற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:
செப்., 5ம் தேதி நாடு முழுதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும், பள்ளிகளில் மாணவர்களிடையே போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதற்காக, வகுப்பு நேரம் போக, மற்ற நேரத்தில், மாணவர்கள் தயாராகி வருகின்றனர்.இந்நிலையில், கருணாநிதி நுாற்றாண்டு விழாவுக்கு, ஆசிரியர் தினத்துக்கு முன்புள்ள இந்த வாரத்தில் போட்டி நடத்த வேண்டும் என, திடீரென உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், பல இடங்களில் ஆசிரியர் தின நிகழ்ச்சிகளுக்கு, மாணவர்கள் தயாராக முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.எனவே, தேசிய அளவில் கடைபிடிக்கப்படும், முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, ஆசிரியர் தின நிகழ்ச்சிகளுக்கு, தமிழக பள்ளிக்கல்வி துறை முன்னுரிமை வழங்க வேண்டும். கருணாநிதி நுாற்றாண்டு போட்டிகளை தள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
