UPDATED : ஆக 28, 2023 12:00 AM
ADDED : ஆக 28, 2023 07:17 AM
திருப்பூர்:
குமரன் மகளிர் கல்லுாரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில், கர்நாடக மாநில தோட்டக்கலை மற்றும் பட்டுவளர்ச்சித்துறை அரசு செயலர் மோகன்ராஜ், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். தான் ஐ.ஏ.எஸ்.,ஆகத் தேர்வானது எப்படி என்பது குறித்து சுவாரசியத்துடன் தகவல் பகிர்ந்தார்.அவரது பேச்சு:
அவிநாசி தான் சொந்த ஊர். திருப்பூர், புனித ஜோசப் பள்ளியில் தான் படித்தேன். எட்டாவது படிக்கும் போது, டாக்டருக்கு படிக்கலாமா, இன்ஜினியருக்கு படிக்கலாமா என யோசித்தேன். கணக்கு பாடத்தில் நான் கொஞ்சம் வீக் என்பதால், இன்ஜினியரிங் எண்ணத்தை தவிர்த்தேன். டாக்டருக்கு படிக்கலாம் என முடிவெடுத்தேன்.ஒரு நாள் பள்ளி ஆண்டு விழா நடந்தது; ஏராளமான பெற்றோர் விலையுயர்ந்த கார்களில் வந்தனர். அப்போது, கொண்டை வச்ச ஒரு கார் வந்தது; மற்ற கார்களுக்கு கிடைக்காத ஒரு மரியாதை அந்த காருக்கு கிடைத்தது. விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த அப்போதைய கோவை கலெக்டரின் ரெட் லைட் பொருத்திய அம்பாசிடர் கார் தான் இது. கொண்டை வச்ச கார்ன்னு தான் சொல்வாங்க.ரேஸ்கோர்ஸில், 8 ஏக்கரில் அமைந்துள்ள கலெக்டர் வீடு தான், கோவையின் பெரிய வீடு. இதுபோன்ற கொண்டை வச்ச காரில் வர வேண்டும்; பெரிய வீட்டில் குடியிருக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. கலெக்டருக்கு படிக்கும் எண்ணம் வந்தது.கல்லுாரியில், பி.ஏ., முடித்து, எம்.ஏ., படிக்கும் போது, ஐ.ஏ.எஸ்., ஆக, சிறியளவிலான போட்டி தேர்வுகளை எழுதும் போது, ஐ.ஏ.எஸ்., தேர்வு எளிதாக இருக்கும் என, ஒரு பேராசிரியர் கூறினார்; அதன்படி, போட்டி தேர்வெழுதினேன். எல்.ஐ.சி., யில் வேலை கிடைத்தது. படிப்பை பாதியில் விட்டு, வேலையில் சேர்ந்தேன். வேலையில் இருந்த கவனம், படிப்பின் மீது வரவில்லை. ஐ.ஏ.எஸ்., போன்ற தேர்வெழுத, குறைந்தது, 2,3 ஆண்டுகள் முழு கவனம் செலுத்தி படித்தாக வேண்டும் என்பதை உணர்ந்தேன்.எல்.ஐ.சி., வேலையை ராஜினாமா செய்து, கோச்சிங் சென்டரில் இணைந்தேன்; ஏழு ஆண்டுகளில், இரண்டு முறை தேர் வெழுதி தோற்றேன்; மூன்றாவது முயற்சியில், தேர்ச்சி பெற்றேன். எனவே, குறிக்கோள்களை வகுத்து, அதை நோக்கி பயணிக்க வேண்டும்; வெற்றி கிடைக்கும்.
