ஆசிரியர்கள் பணி விவகாரம்: கோப்புகளை திருப்பி அனுப்பும் டி.இ.ஓ.,
ஆசிரியர்கள் பணி விவகாரம்: கோப்புகளை திருப்பி அனுப்பும் டி.இ.ஓ.,
UPDATED : ஆக 31, 2023 12:00 AM
ADDED : ஆக 31, 2023 05:06 PM
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், ஆசிரியர்களின் பணிவரன்முறை செய்வதற்கான கோப்புகளை காலதாமதம் செய்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் திருப்பி அனுப்புவதாக ஆசிரியர்கள் வேதனை தெரிவித்தனர்.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பொள்ளாச்சி, தெற்கு, வடக்கு, ஆனைமலை, வால்பாறை, கிணத்துக்கடவு, மதுக்கரை உள்ளிட்ட வட்டார கல்வி அலுவலகங்கள் உள்ளன. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிக்கு என, தனி கல்வி மாவட்ட அலுவலரும், தொடக்க, நடுநிலைப்பள்ளிக்கு என, தனி கல்வி மாவட்ட அலுவலரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் பணிவரன் முறை செய்வதற்கான கோப்புகளை திருப்பி அனுப்புவதாக ஆசிரியர்கள் புகார்கள் தெரிவித்தனர். பணியில் சேர்ந்த ஆசிரியர், பணிவரன் முறை, வட்டார கல்வி அலுவலர் நிலையிலேயே ஆணை பிறப்பித்திட முடியும் எனக்கூறி கோப்புகளை திருப்பி அனுப்புகின்றனர். இதனால், ஆசிரியர்கள் பணி வரன் முறை செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது.தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் தங்கபாசு கூறியதாவது:
அ.தி.மு.க., ஆட்சியில், தொடக்க நிலை, உயர்நிலை என அனைத்தும் மாவட்ட கல்வி அலுவலர் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் தற்போது, மீண்டும் தொடக்க கல்வி அலுவலகம் தனியாக பிரிக்கப்பட்டுள்ளது. இதற்கென தனி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். மேலும், வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களின் கடமைகள் குறித்து அரசாணையில் கல்வித்துறை தெரிவித்துள்ளது.இந்நிலையில், தொடக்க கல்வித்துறையில் பணிகளை வரன் முறை செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஏற்கனவே பதவி உயர்வு பெற்றவர்களும் தற்போது பணி வரன்முறைக்காக வட்டார கல்வி அலுவலர் வாயிலாக மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்துக்கு விண்ணப்பிக்கின்றனர். ஆனால், விண்ணப்பங்களை ஏதாவது காரணம் கூறி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் திருப்பி அனுப்புகிறார். அரசு அறிவிப்பு வருவதற்கே முன் பதவி உயர்வு பெற்றவர்களை, அப்போது இருந்தவர்கள் தான் பணி வரன் முறை செய்திருக்க வேண்டும் என கூறுவது வேதனை அளிக்கிறது.மேலும், வட்டார கல்வி அலுவலர்கள், ஆசிரியர்களின் பணிக்காலத்தை பொறுத்து, தேர்வுநிலை, சிறப்பு நிலைகளை வழங்கும் அதிகாரம் உள்ளது. பணியை வரன்முறை செய்யும் அதிகாரம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலருக்கு தான் உள்ளது. இது குறித்து தெரிவித்தும் மீண்டும் கோப்புகளை திருப்பி அனுப்புகிறார். இதனால், தொடக்க பள்ளி தலைமையாசிரியர், இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்களாகவும், நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்றவர்கள் பணிவரன்முறை செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர்.இதில், உள்ள பிரச்னைகளை களைய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காண முன்வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.பொள்ளாச்சி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் வள்ளியம்மாள் கூறுகையில், ஆசிரியர்கள் நேரடியாக வந்து தெரிவித்தால் உடனடியாக தீர்வு காணப்படும். கோப்புகளை திருப்பி அனுப்புவதில்லை. வட்டார கல்வி அலுவலர் நிலையிலேயே தீர்வு காணக்கூடிய கோப்புகளை மட்டுமே திருப்பி அனுப்புகிறேன் என்றார்.
