UPDATED : செப் 03, 2023 12:00 AM
ADDED : செப் 03, 2023 05:51 PM
ராயப்பேட்டை:
சென்னை, கோபாலபுரம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம், கோபாலபுரம் கல்வி சொசைட்டி சார்பில் பிட்ஸ் பிலானியின் நிறுவனர் லட்சுமி நாராயணன் நினைவாக அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சி நடந்தது.கோபாலபுரம் கல்வி சொசைட்டியை 1927ல், லட்சுமி நாராயணன் நிறுவினார். அவரது நினைவாக அறிவியல் கண்காட்சி நடைபெறுகிறது. நிகழ்ச்சியில், முன்னாள் வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தமிழகத்தில் இதுவரை வந்த சக்தி வாய்ந்த புயல்கள் குறித்து, மாணவர்களுக்கு திரையிட்டு காண்பித்து ரமணன் விளக்கினார். புயல் எப்படி உருவாகிறது, எப்படிப்பட்ட பேரழிவை ஏற்படுத்தி செல்லும், எந்த திசை நோக்கி கரையை கடக்கும் என்பதை அறிவியல் பூர்வமாக எப்படி கண்டுபிடிப்பது என்பது குறித்தும் அவர் விளக்கினார்.தொடர்ந்து நடந்த அறிவியல் கண்காட்சியில், 45 தனியார் மற்றும் அரசு பள்ளிகள் பங்கேற்றன. அதில், வருங்காலத்தில் பயோ காஸ் உபயோகிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து மாணவ, மாணவியர், விளக்கினர். நிகழ்ச்சியில், கணபதி அய்யர் பெண்கள் உயர்நிலை பள்ளியின் தலைவர் நிர்மலா சுப்பிரமணி மற்றும் தலைமை ஆசிரியை சாரதா மணி உள்ளிட்டோர், மாணவர்களின் அறிவியல் கண்காட்சி குறித்து விளக்கினர்.
