புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கு ஆட்சி மன்ற குழு நியமிக்க கோரிக்கை
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கு ஆட்சி மன்ற குழு நியமிக்க கோரிக்கை
UPDATED : செப் 03, 2023 12:00 AM
ADDED : செப் 03, 2023 05:56 PM
புதுச்சேரி:
தொழில்நுட்ப பல்கலைக்கு ஆட்சிமன்ற குழுவை நியமிக்க முன்னாள் எம்.பி., ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.அவர் விடுத்துள்ள அறிக்கை:
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலை பேராசிரியர்கள் பணிகளை புறக்கணித்து அடையாள உண்ணாவிரதம் இருந்திருப்பது வருத்தத்திற்குரியது. அவர்களை இந்த நிலைக்கு தள்ளியது அரசுதான். அரசின் முதல் பல்கலை கழகத்தை கண்ணும் கருத்துமாக பார்த்து, தரமான பல்கலையாக மாற்ற வேண்டியது அரசின் கடமை. ஆனால், பல்கலையாக மாற்றிய பிறகும், அதை ஒரு கல்லுாரியாகவே நடத்துவது முறையற்ற செயல்.பல்கலை சட்டத்தின் படி பல்கலை துவங்கிய உடனே அதற்கான ஆட்சி மன்றக்குழுவை கவர்னர் அமைத்திருக்க வேண்டும். மூன்றரை ஆண்டாகியும் ஆட்சி மன்றக்குழுவை நியமிக்காதது அரசியல் அமைப்பு சட்டத்தை மீறிய ஒரு செயல். ஆட்சி மன்ற குழு இல்லாமல் பல்கலை ஒரு கல்லுாரியாகத்தான் திகழும். எந்த வளர்ச்சியும் ஏற்படாது. தரம் உயராது.தேசிய தரவரிசையில் கல்லுாரியாக இருந்தபோது 34வது இடத்தில் இருந்தது, பல்கலையாக மாறிய பிறகு 200-வது இடத்திற்கு கீழே தள்ளப்பட்டுள்ளது. முதல் தர பல்கலையாக மாற்ற வேண்டும் என்பதற்காக பேராசிரியர்கள் போராட துவங்கியுள்ளனர். இதை உணர்ந்து அரசு பல்கலைக்கு திறமையான, அனுபவம் வாய்ந்த பதிவாளரை நியமிப்பதோடு, ஆட்சிமன்றக் குழுவையும் உடனடியாக துணைவேந்தர் தலைமையில் நியமித்திட வேண்டும். தொழில் நுட்ப பல்கலையை சரியான பாதையில் செயல்படுத்த வைக்க வேண்டியது கவர்னர், முதல்வர் கடமை.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
