UPDATED : செப் 04, 2023 12:00 AM
ADDED : செப் 04, 2023 09:19 AM
கோவை: கோவை மாவட்டத்தில் தகுதியுள்ள மாணவ, மாணவியருக்கு கல்வி கடன் வழங்குவதை உறுதி செய்ய, கலெக்டர், டி.ஆர்.ஓ., மற்றும், 10 பேர் கொண்ட முதன்மை குழு அமைக்கப்பட்டுள்ளது.மாணவ, மாணவியர் உயர் கல்வி பயில்வதற்கு, கோவை மாவட்டத்தில் கல்வி கடன் முகாம் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த மாதம் நடத்தப்பட்ட முகாம்கள் மூலம் ஏராளமான மாணவர்களிடம் விண்ணப்பம் பெறப்பட்டு, பரிசீலனை செய்யும் பணி நடந்து வருகிறது. வரும், 22ம் தேதி குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி 26ல் பொள்ளாச்சியில் டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி 29ல் ஈச்சனாரி கற்பகம் உயர்கல்வி அகாடமி ஆகிய இடங்களில் கல்வி கடன் வழங்கும் முகாம்கள் நடைபெற உள்ளன.மாணவர்கள் படிக்கும் கல்லுாரி வளாகத்திலேயே, முதல் பட்டதாரி, வருமான சான்று, இருப்பிட சான்று, பான் கார்டு போன்ற சேவை பெற, வரும் 4ம் தேதி முதல் 20ம் தேதி வரை சேவை மையங்கள் அமைத்து, விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கடன் வழங்க, கலெக்டர் தலைமையில் டி.ஆர்.ஓ.,வை உறுப்பினர் செயலராக கொண்டு, 10 அலுவலர்கள் கொண்ட முதன்மை குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, கல்வி கடன் வழங்கும் பணியை கண்காணித்து வருகிறது.கலெக்டர் அலுவலக தரைத்தளத்தில் அறை எண்: 16ல் பிரத்யேகமாக கண்காணிப்பு அலுவலகம் அமைக்கப்பட்டு மேற்பார்வை செய்யப்படுகிறது. உயர் கல்வி கற்கும் மாணவ, மாணவியர் முகாம்களில் பங்கேற்று பயன் பெறலாம் என, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.
