இன்று ஆசிரியர் தினம்; சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் சாதனைகள் என்னென்ன?
இன்று ஆசிரியர் தினம்; சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் சாதனைகள் என்னென்ன?
UPDATED : செப் 05, 2023 12:00 AM
ADDED : செப் 05, 2023 02:15 PM
இன்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பிரதமர், முதல்வர் உள்ளிட்ட பலர் கல்விப்பணியில் ஈடுபட்டு மாணவர்களின் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரபல அரசியல் தலைவர், தத்துவமேதை, பள்ளி ஆசிரியர், கல்லூரி துணைவேந்தர் என பன்முகங்கள் கொண்டவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். அவரைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை அவரது பிறந்தநாளான இன்று (செப்.,5) தெரிந்துகொள்வோம்.1888 ஆம் ஆண்டு மதராஸ் மாநிலத்தின் திருத்தணியில் உள்ள குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்த அவர் கல்விமூலம் வாழ்வில் முன்னேறி உயர்ந்த நிலையை அடைந்தார். ராதாகிருஷ்ணன் மதராஸ் பல்கலையில் இளங்கலை தத்துவம் படித்தபோது சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரையான த எத்திக்ஸ் ஆப் வேதாந்த அண்டு இட்ஸ் மெட்டாபிசிக்கல் பிரிசப்போசிஷன்ஸ் என்கிற வேதாந்த தத்துவத்தை ஆய்வு செய்யும் கட்டுரை அதிக வரவேற்பு பெற்றது.அத்வைத வேதாந்தத்தின் வளர்ச்சிக்கு ராதாகிருஷ்ணன் முக்கியப் பங்காற்றினார். இந்துமதம் குறித்த மேலை நாட்டவரின் விமர்சனங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு தத்துவ ரீதியாக பதில் அளித்தார். இந்து மத தத்துவம் குறித்து பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். ஆந்திரா பல்கலை மற்றும் பனாரஸ் இந்து பல்கலை.,யின் நான்காவது துணை வேந்தராகப் பதவி வகித்தார்.காங்கிரஸ் கட்சியில் நேரடி உறுப்பினராக இல்லாமல் மறைமுகமாக அக்கட்சிக்கு ஆதரவு தெரிவித்து வந்தவர் ராதாகிருஷ்ணன். இந்திய சுதந்திர அமைப்பிலும் ராதாகிருஷ்ணன் அங்கம் வகிக்கவில்லை. ஆனால் அவர் இந்திய சுதந்திரத்துக்குப் பின்னர் அரசியலில் செய்த சாதனைகள் ஏராளம். 1952 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் துணை குடியரசுத் தலைவராக நியமிக்கப்பட்ட ராதாகிருஷ்ணன், நாட்டின் 2வது குடியரசுத் தலைவராக நியமிக்கப்பட்டார். யுனெஸ்கோவில் இந்தியா சார்பாகக் கலந்துகொண்டு நாட்டுக்குப் பெருமை சேர்த்தார்.சோவியத் யூனியனின் முதல் இந்தியத் தூதுவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஆவார். அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடியுடனான இவரது சந்திப்பு அமெரிக்க-இந்திய நட்புறவை வளர்க்க உதவியது. நைட்ஹுட், இந்தியாவின் உயரிய விருதான பாரத் ரத்னா, பிரிட்டிஷ் உயரிய விருதான ஆர்டர் ஆஃப் மெரிட் உள்ளிட்ட பல விருதுகளையும் பல்வேறு டாக்டர் பட்டங்களையும் பெற்றார்.ஜி.டி பிர்லாவுடன் இணைந்து கிருஷ்ணார்பன் அறக்கட்டளையை உருவாக்கி பொது சேவையில் ஈடுபட்டார். இதனால் பலனடைந்த ஏழை குழந்தைகள் பலர் பிற்காலத்தில் கல்வி பயின்று பல்வேறு துறைகளில் பணியாற்றினர். தெலுங்கரான ராதாகிருஷ்ணன், பிரிட்டிஷ் அரசின் மதராஸ் மாநிலம் என்கிற பொதுப் பெயருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவின் தற்போதைய ராயலசீமா என்கிற பெயர் மாற்றத்துக்கு வழிவகுத்தார்.முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லக்ஷ்மணின் தாய் வழிப் பாட்டனார் ராதாகிருஷ்ணன். ராதாகிருஷ்ணனின் குடும்பத்தில் பலர் தொழில், வங்கி, மருத்துவம், கல்வி என பல துறைகளில் சாதித்துள்ளனர். ராதாகிருஷ்ணனின் மகன் சர்வப்பள்ளி கோபால் இந்தியாவின் மூத்த வரலாற்று அறிஞர்களுள் ஒருவராவார்.
