UPDATED : செப் 07, 2023 12:00 AM
ADDED : செப் 07, 2023 09:18 AM
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில், ஆதிதிராவிடர் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணிக்கு, தொகுப்பூதியத்தில் பணிபுரிய விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.திருவள்ளூர் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் 19, பட்டதாரி 4 மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் 4 என மொத்தம், 27 பணியிடம் தொகுப்பு ஊதியத்தில் நிரப்பட உள்ளது. இந்த காலி பணியிட விபரம் குறித்து, திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் மற்றும் திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி தனி வட்டாட்சியர் அலுவலக அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டு உள்ளது.இந்த பணியிடங்களுக்கு, இடைநிலை ஆசிரியருக்கு 12,000, பட்டதாரி ஆசிரியருக்கு 15,000, முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கு 18,000 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படும். தற்போது, அரசு நடைமுறையில் உள்ள கல்வி தகுதியுடன், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டியலினத்தவருக்கும், இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தன்னார்வலராக பணிபுரிந்தோர் மற்றும் பள்ளி அமைந்துள்ள அந்தந்த பகுதிகளில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில், வரும் 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
