பாடக்குறிப்பு எழுதுவது எப்படி? கலை பாடங்கள் நிலை கவலை
பாடக்குறிப்பு எழுதுவது எப்படி? கலை பாடங்கள் நிலை கவலை
UPDATED : செப் 10, 2023 12:00 AM
ADDED : செப் 10, 2023 04:54 PM
கோவை:
கலைப்பாடங்களுக்கு பிரத்யேக பாடத்திட்டம் வழங்காததால், பாடக்குறிப்புகள் எழுதி வகுப்பு கையாள்வது எப்படி என்ற, கேள்வி எழுந்துள்ளது.பள்ளிக்கல்வித்துறையில் அனைத்து வகுப்புகளுக்கும், படிப்படியாக பாடத்திட்டம் மாற்றப்பட்டது. ஆனால், தையல், இசை, ஓவியம் உள்ளிட்ட கலைப்பாடங்களுக்கு மட்டும் குழு அமைத்தும் பிரத்யேக பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு பள்ளிகளுக்கு அனுப்பப்படவில்லை. வழக்கமாக தினசரி வகுப்பில் என்ன பாடத்தில் எந்த தலைப்பு கையாளப்போகிறோம் என நோட்ஸ் ஆப் லெசன் ஆசிரியர்கள் எழுதுவர். முன்கூட்டியே பாடத்தலைப்புகளுக்கு ஏற்ப வகுப்பில் விளக்க வேண்டிய பாட கருவிகளை தயாரித்து கொள்வதும் அவசியம்.இதை அனைத்து பாட ஆசிரியர்களும், முறையாக பின்பற்றுவதை உறுதி செய்யுமாறு, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் கலைப்பாடங்களுக்கு, பாடத்திட்டம் இல்லாத நிலையில், ஒவ்வொரு பள்ளியிலும் வெவ்வேறு மாதிரி, பாடக்குறிப்புகள் எழுதும் நிலை நீடிப்பதாக, புகார் எழுந்துள்ளது.கலைப்பாட ஆசிரியர்கள் கூறியதாவது:
தையல், இசை, ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட எட்டு பாடங்களுக்கும், பாடத்திட்டம் இல்லை. உடற்கல்வி பாடத்துக்கு, பிரத்யேக புத்தகம் வழங்கப்படுவதில்லை. ஆனால், காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் மட்டும் நடத்தப்படுகின்றன. பாடக்குறிப்புகள் எழுதி வகுப்பு கையாள்வதிலும், சிரமம் நீடிக்கிறது. மற்ற பாடங்களுக்கு அவ்வப்போது ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி, கற்பித்தல் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. ஆனால் கலைப்பாடங்களை கல்வித்துறை கண்டுகொள்வதில்லை. செய்முறை வகுப்பாக கலைப்பாடங்கள் இருக்கும் நிலையில், எதை கற்பிக்க வேண்டுமென, பாடதிட்டம் பள்ளிகளுக்கு அனுப்பினால் தான், குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும்.இவ்வாறு, தெரிவித்தனர்.
