UPDATED : செப் 11, 2023 12:00 AM
ADDED : செப் 11, 2023 09:20 AM
மஹாராஷ்டிராவில், 1895ம் ஆண்டு செப்.,11ம் தேதி எளிய குடும்பத்தில் பிறந்த ஆச்சார்ய வினோபா பாவே, மகாத்மா காந்தியின் அகிம்சையில் ஈர்க்கப்பட்டு, சபர்மதி ஆசிரமத்தில் வசித்தார்.சுதந்திரத்திற்கு பின், ஆந்திராவில், நிலம் கேட்டு, தலித் மக்கள் போராடினர்; அரசு, அடக்குமுறையால் அடக்க நினைத்தது; முடியவில்லை! வினோபா பாவே, அவர்களை சந்தித்தார்; அவர்கள், தங்களுக்கு, 80 ஏக்கர் நிலம் கிடைத்தால் போதும் என்றனர். உடனே ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தவர், யாரால், ஏழை மக்களுக்கு நிலத்தை தானம் செய்ய முடியும்? என கேள்வி எழுப்பினார்; ஒருவர், நான், 100 ஏக்கர் தருகிறேன் என்றார். பூமி தான இயக்கத்திற்கு, முதல் விதை அங்கே தான் விழுந்தது!அடுத்த, 14 ஆண்டுகள், தேசம் முழுவதும், 70 ஆயிரம் கி.மீ., நடந்து சென்று, 42 லட்சம் ஏக்கர் நிலத்தை, நிலவுரிமையாளர்களிடமிருந்து பெற்று, நிலம் இல்லாதவர்களுக்கு தந்தார். காந்தியத்திற்கு பெருமை சேர்த்த, பாரத ரத்னா வினோபா பாவே, 1982ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி மறைந்தார்.
