நாட்டுப்புற கலைப்பயிற்சி: பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு
நாட்டுப்புற கலைப்பயிற்சி: பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு
UPDATED : ஜன 18, 2010 12:00 AM
ADDED : ஜன 18, 2010 05:01 PM
திருநெல்வேலி மண்டலக் கலை பண்பாட்டு மையத்தின் சார்பாக, கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு நாட்டுப்புறக் கலைப் பயிற்சி முகாம் நடக்கிறது.
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் வாயிலாக மரபுக் கலை மற்றும் பண்பாட்டினை மேம்படுத்தும் நோக்கில் 100 நாட்டுப்புறக் கலைகளைப் பட்டியலிட்டு அரசு ஆணையிட்டுள்ளது. இவ்வரசாணையின் படி திருநெல்வேலி மண்டலத்திற்குட்பட்ட திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் இந்நாட்டுப்புறக் கலைப் பயிற்சியில் கலந்து கொள்ளலாம். இந்நாட்டுப்புறக் கலைப் பயிற்சி முகாமில் சிலம்பாட்டம், தப்பாட்டம், களரி, ஒயிலாட்டம், வில்லுப்பாட்டு, தேவராட்டம் ஆகிய கலைகளில் பயிற்சி அளிக்கப்படும்.
இக்கலைகளில் தேர்ச்சிபெற்ற சிறந்த கலைஞர்களைக் கொண்டு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு நேரமாக காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு, அரங்கேற்றம் செய்யப்பட்டு உரிய சான்றிதழ்கள் வழங்கப்படும். பயிற்சியில் கலந்து கொள்ள உரிய பள்ளி மற்றும் கல்லூரி தலைவர்களின் அனுமதிக் கடிதத்துடன், மாணவர்கள் பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஆகவே பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மாணவ, மாணவியர்கள், உதவி இயக்குநர், மண்டலக் கலை பண்பாட்டு மையம், 820/8, டிராக்டர் வீதி, அரசு அலுவலர் குடியிருப்பு, திருநெல்வேலி, தொலைபேசி. 0462-2553890 என்ற முகவரிக்கு பத்து தினங்களுக்குள் பதிவு செய்து கொள்ளுமாறு உதவி இயக்குநர் முத்து தெரிவித்துள்ளார்.
