கேரளா: நீக்கப்பட்ட பகுதிகளை தொகுத்து புதிய புத்தகம்
கேரளா: நீக்கப்பட்ட பகுதிகளை தொகுத்து புதிய புத்தகம்
UPDATED : செப் 12, 2023 12:00 AM
ADDED : செப் 12, 2023 09:44 AM
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. புதுடில்லியை தலைமையிடமாக வைத்து செயல்படும் என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில், பள்ளிக் கல்விக்கான பாடப் புத்தகங்களை வடிவமைக்கிறது. இந்தப் பாடப் புத்தகங்கள், சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் உட்பட பல கல்வி வாரியங்களில் பயன்படுத்தப்படுகின்றன.கொரோனா காலத்தில் மாணவர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளானதால், சில பாடப் புத்தகங்களில் சில பிரிவுகள் திருத்தப்பட்டன; சில பிரிவுகள் நீக்கப்பட்டன. அவ்வாறு நீக்கப்பட்ட பாடப்பிரிவுகளை தொகுத்து தனிப் பாடப் புத்தகமாக கேரள அரசின் பள்ளிக் கல்வித் துறை உருவாக்கிஉள்ளது.அந்த மாநில சட்டசபையில் இது குறித்து அமைச்சர் சிவன்குட்டி கூறியதாவது:
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில், மகாத்மா காந்தியின் படுகொலை, அதில் ஆர்.எஸ்.எஸ்., பங்கு, மொகலாய ஆட்சி மற்றும் சாம்ராஜ்யத்தின் சில பகுதிகள், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் சில பகுதிகள் உள்ளிட்ட பல விஷயங்களை நீக்கியுள்ளது. இது போல் நீக்கப்பட்ட பகுதிகளை தொகுத்து, புதிய பாடப்புத்தகத்தை உருவாக்கினோம். இது வெறும் பாடப் புத்தகமாக இல்லாமல், மாணவர்கள் படித்து தேர்வு எழுதக்கூடிய பாடத்திட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதன் முறையாக கேரளாவில் தான், என்.சி.இ.ஆர்.டி.,யால் நீக்கப்பட்ட பாடங்கள் தொகுத்து புதிய பாடமாக உருவாக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.கடந்த மாதம் இந்த புத்தகத்தை வெளியிட்ட கேரள முதல்வர் பினராயி விஜயன், பள்ளிப் பாடப் புத்தகங்களில் இருந்து முக்கியமான பாடங்களை என்.சி.இ.ஆர்.டி., நீக்கியுள்ளது என குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
