UPDATED : செப் 16, 2023 12:00 AM
ADDED : செப் 16, 2023 04:59 PM
கோவை:
பாரதியார் பல்கலையில் துணைவேந்தர் தேடல் குழு நியமனத்தில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து விவாதிக்க, சிறப்பு சிண்டிகேட் கூட்டம், உயர்கல்வித்துறை செயலர் கார்த்திக் தலைமையில் கூடுகிறது.கடந்த 2022 அக்., மாதம் முதல், பாரதியார் பல்கலையில் துணைவேந்தர் பதவி காலியாகவுள்ளது. நீண்ட இழுபறிக்கு பின், தமிழக கவர்னர் ரவி, கடந்த வாரம் நான்கு பேர் கொண்ட தேடல் குழுவை அறிவித்தார். பல்கலை சட்ட விதிமுறைகளின் படி, மூன்று பேர் கொண்ட தேடல் குழு மட்டுமே அமைக்க இயலும்.புதிதாக, யு.ஜி.சி., நாமினியை நான்காம் நபராக குழுவில் கவர்னர் இணைத்து பெயர்களை அறிவித்திருந்தார். சட்ட விதிகளில் உரிய திருத்தம் ஏற்படுத்தாமல், புதிய நடைமுறை பின்பற்ற இயலாது என்பதால், இதுகுறித்து, பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியது.இந்நிலையில், துணைவேந்தர் தேடல் குழு சார்ந்த நிலைப்பாட்டில் என்ன செய்யவேண்டும் என்பது குறித்து விவாதிக்க சிண்டிகேட் கூட்டம் கூட்டப்பட்டது. மேலும், பயோ இன்பர்மேடிக்ஸ் துறையில், பேராசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ள பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.
