திருத்தணி கல்வி அலுவலகத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை
திருத்தணி கல்வி அலுவலகத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை
UPDATED : செப் 16, 2023 12:00 AM
ADDED : செப் 16, 2023 05:08 PM
திருத்தணி:
திருத்தணி டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள ஆய்வகத்தில் திருத்தணி வட்டார கல்வி அலுவலகம் இயங்கி வருகிறது.இக்கல்வி அலுவலகம் வாயிலாக 98 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் செயல்படுகிறது. தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும், 340 ஆசிரியர்கள் செயல்பாடுகள், நியமனம் தொடர்பான அனைத்து ஆவணங்கள் மற்றும் பணிகளை வட்டார கல்வி அலுவலகம் கண்காணிக்கிறது.இந்நிலையில், வட்டார கல்வி அலுவலகத்தில், இரு வட்டார கல்வி அலுவலர்கள், ஒரு கண்காணிப்பாளர், ஒரு தட்டச்சர், நான்கு இளநிலை உதவியாளர், ஒரு உதவியாளர், ஒரு இரவு காவலர் என மொத்தம், 10 பேர் பணிபுரிய வேண்டும். ஆனால் தற்போது இரு வட்டார கல்வி அலுவலர்கள், ஒரு தட்டச்சர், ஒரு இளநிலை உதவியாளர் என நான்கு பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். கண்காணிப்பாளர் நீண்ட மருத்துவ விடுப்பில் சென்று உள்ளார்.ஊழியர்கள் பற்றாக்குறையால் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி செயல்பாடுகள் மற்றும் அரசு நல திட்ட உதவிகள் மாணவர்களுக்கு வழங்குவதில் காலதாமதம் ஆகிறது.எனவே, திருத்தணி வட்டார கல்வி அலுவலகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
