பள்ளி பார்வை பயிற்சி முகாம்: 250 ஆசிரியர்கள் பங்கேற்பு
பள்ளி பார்வை பயிற்சி முகாம்: 250 ஆசிரியர்கள் பங்கேற்பு
UPDATED : செப் 16, 2023 12:00 AM
ADDED : செப் 16, 2023 05:11 PM
நாமக்கல்:
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தில், பள்ளி பார்வை பயிற்சி முகாம், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில், நேற்று நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை வகித்து, துவக்கி வைத்து பேசினார். மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் மணிவண்ணன், உதவி திட்ட அலுவலர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முகாமில், பள்ளி வகுப்பறை செயல்பாடுகளை எவ்வாறு பார்வையிடுவது, ஆசிரியர் மற்றும் மாணவர்களின் கலந்துரையாடலை பார்வையிட்டு தகவல் சேகரிப்பது, தகவல்களின் உண்மைத் தன்மை, தகவல்களின் முக்கியத்துவம், அவற்றை எவ்வாறு பள்ளி பார்வை செயலியில் பதிவிடுவது குறித்து விளக்கப்பட்டது.மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் முருகன், மல்லசமுத்திரம் வட்டார கல்வி அலுவலர் சக்திவேல், நாமக்கல் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் ரவிக்குமார், தமிழ்நாடு பெல்லோஷிப் சுகனேஸ்வரன், சசிகுமார், செல்வி ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டனர்.மாவட்ட கல்வி அலுவலர்கள், சி.இ.ஓ., நேர்முக உதவியாளர்கள், உதவி திட்ட அலுவலர்கள், பள்ளி துணை ஆய்வாளர்கள், அரசு மேல்நிலை, உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
