UPDATED : ஜன 21, 2010 12:00 AM
ADDED : ஜன 21, 2010 12:22 PM
சென்னை: நிகர்நிலைப் பல்கலை அங்கீகாரம் ரத்தாகும் கல்வி நிறுவன மாணவர்கள், தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கல்லூரியின் கண்ணாடி, ஆய்வகங்களை அடித்து நொறுக்கி வருகின்றனர்.
இதையடுத்து, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் உள்ள கல்லூரிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அங்கீகாரம் ரத்தாகும் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் படிக்கும் மாணவர்கள் எதிர்காலம் பாதிக்காத வகையில் அரசுப் பல்கலைகள் அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஆய்வு செய்து வருகின்றன.
மாணவர்களின் கல்வி பாதிக்காதபடி, அருகில் உள்ள பல்கலைகளுடன் சேர்க்கப்படும் என்றும், சென்னையை ஒட்டியுள்ள பகுதிகளில் படிக்கும் மாணவர்கள் ,அண்ணா பல்கலையுடன் சேர்ந்து படிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக் கழக மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கல்லூரி நுழைவாயிலுக்கு வெளியே நின்று கோஷம் எழுப்பினர். பல்லாவரம் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், மாணவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
வேல்ஸ் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு, வரும் 27ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றபடி, மாணவர்களுக்கு வழக்கமான வகுப்புக்கள் நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் போராட்டங்களை அடுத்து, புறநகரில் உள்ள கல்லூரிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
