UPDATED : அக் 14, 2023 12:00 AM
ADDED : அக் 14, 2023 05:27 PM
மதுரை:
மதுரை மாநகராட்சி பள்ளிகளில் கே.ஜி., வகுப்புகளில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் சம்பளத்தில்பிடித்தம் செய்வதை கைவிட வேண்டுமென எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.மாநகராட்சி பள்ளிகளில் கே.ஜி., வகுப்புகளுக்கு மாதம் ரூ.7 ஆயிரம் சம்பளம் அடிப்படையில் 2018 முதல் 75க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டனர். உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத நிலையில், அப்போதைய கமிஷனரான அனீஷ்சேகர் இந்த உத்தரவை பிறப்பித்தார். இதன்படி மே தவிர 11 மாதங்கள் இவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டது.இதன் பின் உள்ளாட்சி தேர்தல் நடந்து மேயர் பொறுப்பேற்றவுடன் கே.ஜி., ஆசிரியர்களுக்கு 89 நாட்கள் பணி முறை அமல்படுத்தப்பட்டது. அதாவது 89 நாட்கள் பணி முடிந்தவுடன் ஒரு நாள் பணி முறிவு வழங்கி, மீண்டும் அதே பணியில் நியமிக்கப்படுவது.இந்த 89 நாட்களில் காலாண்டு, அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்களுக்கான சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் ரூ.3 ஆயிரம் வரை சம்பள இழப்பால் பாதிக்கின்றனர்.பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறியதாவது:
தற்காலிக ஆசிரியர்கள் கொரோனா காலத்திலும் ஆன்லைனில் பாடம் நடத்தினோம். அப்போதெல்லாம் சம்பள பிடித்தம் இல்லை. இந்த 89 நாட்கள் பணி முறை திடீரென மாநகராட்சி முடிவு எடுத்தது.நாங்கள் பெரும்பாலும் பி.ஜி., பி.எட்., முடித்து மாண்டிசோரி பயிற்சியும்முடித்துள்ளோம். 40 வயது கடந்து விட்டது.எங்கள் குடும்ப வாழ்வாதாரம் கருதி தேர்வு விடுமுறை நாட்களுக்கான சம்பள பிடித்தம் முறையை மாநகராட்சி கைவிட மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் பிரவீன்குமார் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
