சிற்பக் கல்லுாரி விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதில் அலட்சியம்
சிற்பக் கல்லுாரி விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதில் அலட்சியம்
UPDATED : அக் 15, 2023 12:00 AM
ADDED : அக் 15, 2023 06:34 PM
ஆசியாவின் ஒரே மரபுக் கல்லுாரியாக விளங்கி வருகிறது. அரசின் அலட்சியப்போக்கால், அதன் தனித்துவத்தை படிப்படியாக இழக்கிறது. கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக, மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.முதல்வர், விரிவுரையாளர்கள் என, 42 ஆசிரியர் பணியிடங்கள், பிற ஊழியர்கள் 24 பணியிடங்கள் காலியாக உள்ளன. முதல்வராக பணியாற்றியவர், கடந்த 2015ல் ஓய்வு பெற்றார். தற்போது, அந்த பணியிடமும் காலியாகவே உள்ளது.கடந்த ஆறு ஆண்டுகளாக, கட்டடக் கலை விரிவுரையாளர் ராஜேந்திரன், பொறுப்பு முதல்வராக நிர்வகித்து, கடந்த ஜூன் மாதம் ஓய்வு பெற்றார். சுதை சிற்ப விரிவுரையாளர் ராமன், தற்போது பொறுப்பு முதல்வராக உள்ளார்.எட்டு ஆண்டுகளாக, முதல்வரே இன்றி, கல்லுாரி இயங்குகிறது. மேலும், விரிவுரையாளர் ஆறு பேர், பயிற்றுனர் இரண்டு பேர் பணிபுரிகின்றனர். கற்சிற்பம், சுதைச்சிற்பம், மரச்சிற்பம், உலோக சிற்பம் என, சிற்பக் கலைகள், கட்டடக் கலை, வண்ண ஓவியக் கலை ஆகிய பிரிவுகளுக்கு, மிக சிலரே பணியாற்றும் அவலநிலை உள்ளது.இங்கு பயின்று, அரசு வேலைவாய்ப்பகத்தில் பதிந்து, பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வானவர்கள், கடந்த 1990ல் விரிவுரையாளர்களாக நியமிக்கப்பட்டனர். தற்போது 240க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர். கலை மீது கொண்ட ஆர்வத்தால், இங்கு படிக்க வரும் நிலையில், கடந்தாண்டு, சேர்க்கை இடங்கள் 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டது.ஆனால், விரிவுரையாளர்கள் பற்றாக்குறை, கட்டடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாதது ஆகிய காரணங்களால், நடப்பாண்டு கூடுதல் சேர்க்கை தவிர்க்கப்பட்ட அவலம் அரங்கேறியுள்ளது. கல்லுாரியில் ஆய்வு செய்யும் அமைச்சர், அதிகாரிகளிடம், விரிவுரையாளர்கள் இன்றி, கல்வி பாதிக்கப்படுவதாகவும், தேவைக்கேற்ப நியமிக்கவும், மாணவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.ஆசிரியர் தேர்வாணையம் மூலம் நியமிப்பதாக, அவர்கள் தெரிவித்து, ஆண்டுகள் பல கடந்தும் நடவடிக்கை இல்லை. தற்போதும், நிரந்தர விரிவுரையாளர்களை நியமிக்காமல், 20,000 மாத தொகுப்பூதியத்தில், பகுதிநேர பணிக்கே நியமிக்கிறது. கல்லுாரி நிர்வாகத்தினர் கூறுகையில், நீண்டகாலமாக ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதுபற்றி அரசிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது என்றனர். ஒரே மரபுக் கல்லுாரியாக இருந்தும், அரசு கண்டுகொள்ளவில்லை. தேவைக்கேற்ற விரிவுரையாளர்கள் இல்லை. தேர்வு நடக்கும்போது மட்டுமே, வெளிநபர்களை அழைத்து வந்து, கடமைக்காக பயிற்சி அளிக்கின்றனர். எங்கள் படிப்பு தான் வீணடிக்கப்படுகிறது என மாமல்லபுரம் அரசு கட்டட, சிற்பக்கலைக் கல்லுாரி மாணவர்கள் கூறினர்.ஐந்தாண்டு பட்டய கல்வி முறை
மரபு சிற்பம், கட்டடம், ஓவியம் ஆகிய கலைகளை, அடுத்தடுத்த தலைமுறைக்கு பயிற்றுவித்து பாதுகாக்க கருதி, தொழில், வணிக துறையின்கீழ், 1957ல், சிற்ப பயிலகமாக துவக்கப்பட்டது. துவக்கத்தில், தமிழ் மொழியில் எழுதவும், வாசிக்கவும் அறிந்தவருக்கு, சான்றிதழ் கல்வியாக, நான்காண்டு பயிற்றுவிக்கப்பட்டது.பின், தொழில்நுட்ப கல்வித் துறைக்கு, கடந்த 1970ல் மாற்றப்பட்டது. ஐந்தாண்டு பட்டய கல்வி முறையை அறிமுகப்படுத்தி, எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் அனுமதிக்கப்பட்டனர். பட்டயம் பெற்றவர், மேற்கல்வி பயில, 1976ல், மூன்றாண்டு பட்ட கல்வியும் துவக்கப்பட்டது. நாளடைவில், கலை படிப்பு கருதி, 1991ல், கலை, பண்பாட்டுத் துறைக்கு மாற்றப்பட்டது.வாஸ்து விஞ்ஞானி என புகழப்பட்ட கட்டட, சிற்பக்கலைகள் படைத்த கணபதி ஸ்தபதி, முதல்வராக பணிபுரிந்தார். இங்கு பயின்றவர்கள், இந்தியா, சர்வதேச நாடுகளில் சிற்ப, கட்டட கலைகளில் சாதித்து வருகின்றனர்.
