UPDATED : அக் 16, 2023 12:00 AM
ADDED : அக் 16, 2023 09:47 AM
மதுரை:
தொழில்நுட்பங்களை மாணவர்கள் மேம்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும் என்று, மதுரை அண்ணா பல்கலை மையத்தில் மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் குமார் பேசினார்.மதுரை கீழக்குயில்குடியில் உள்ள அண்ணா பல்கலை மண்டல வளாகத்தில் உறுப்புக் கல்லுாரிகளுக்கான பட்டமளிப்பு விழா நடந்தது. சென்னை அண்ணா பல்கலை துணைவேந்தர் வேல்ராஜ் தலைமை வகித்தார். காமராஜ் பல்கலை துணை வேந்தர் குமார், அண்ணா பல்கலை பதிவாளர் பிரகாஷ், இயக்குநர் ஹரிகரன், தேர்வுகட்டுப்பாட்டு அலுவலர் சக்திவேல், டீன் லிங்கதுரை பங்கேற்றனர்.துணைவேந்தர் குமார் பேசியதாவது:
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அலைபேசி என்பது தொலைத் தொடர்பு, தகவல் தொடர்பு, தொழில் நுட்பம் என பன்முகத் தன்மை கொண்டுள்ளது. தற்பொழுது கூகுளை விட ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ட்ஸ் எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. இதன் மூலம் ஒருதகவலை வேகமாக பரிமாற முடியும். இதற்கு மொழிப் புலமையோ தகவல்சேகரிக்கும் திறனோ தேவையில்லை.வாக்கியங்களை தவறில்லாமால் பதிவிட்டாலே வேண்டிய தகவலை முழுவதுமாக பெறலாம். அண்ணா பல்கலையிலும் ஒருங்கிணைந்த டிஜிட்டல் நுாலகம் உள்ளது. இந்த தொழில் நுட்பங்களை முறையாக பயன்படுத்தி மாணவர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும், என்றார்.விழாவில் 4 கல்லுாரிகளை சேர்ந்த 775 மாணவர்களுக்கு பட்டங்களும், தரவரிசையில் இடம்பிடித்த 11 பேருக்கு பதக்கங்களும் வழங்கப்பட்டது. திண்டுக்கல், ராமநாதபுரம், துாத்துக்குடி டீன்கள் சுதா, உதயகுமார், பீட்டர் தேவதாஸ், பங்கேற்றனர்.
