தனியார் மருத்துவ கல்லுாரிகளில் மாணவர்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு
தனியார் மருத்துவ கல்லுாரிகளில் மாணவர்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு
UPDATED : அக் 17, 2023 12:00 AM
ADDED : அக் 17, 2023 07:26 PM
சென்னை:
தனியார் மருத்துவ கல்லுாரிகளில், மாணவர்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளதால், விசாரணை குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என, டாக்டர் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் சுகிர்தா, 27, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரியில், முதுநிலை முதலாம் ஆண்டு படித்து வந்தார். பேராசிரியர் கொடுத்த பாலியல் தொல்லையால், தற்கொலை செய்து கொண்டார்.துன்புறுத்தல்
இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வரும் நிலையில், அக்கல்லுாரியில், மாணவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகளவில் நடந்து வருவதாக, டாக்டர் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.இதுகுறித்து, சமூக சமத்துவத்திற்கான டாக்டர் சங்கத்தின் செயலர் ரவீந்திரநாத் கூறியதாவது:
மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த தனியார் கல்லுாரியில், மாணவர்களுக்கு எதிரான வன்முறை தொடர்ந்து நடந்து வருகிறது.குறிப்பாக, கூடுதல் கட்டணம் வசூல், சிறிய பிரச்னைகளுக்கும் பெருந்தொகை அபராதமாக வசூலித்தல், மாணவர்களை கட்டாயமாக விடுதியிலேயே தங்க வைத்தல், சைக்கிள், கார், பைக், மொபைல்போன் உள்ளிட்டவற்றை பயன்படுத்தக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அத்துடன், விளை யாட்டு, கலை நிகழ்ச்சிகளும், அக்கல்லுாரியில் நடத்தப்படாமல், மன ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.விசாரணை குழு
இதேபோல், பல தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், மாணவர்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளது. மாணவர்களை கொத்தடிமைகள் போல் நடத்துவது குறித்து, ஒரு விசாரணை குழுவை, மத்திய, மாநில அரசு அமைத்து விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
