பள்ளி, கல்லுாரிகளில் போதை பொருள் விற்பனை, குற்றங்ளை தடுக்க உத்தரவு
பள்ளி, கல்லுாரிகளில் போதை பொருள் விற்பனை, குற்றங்ளை தடுக்க உத்தரவு
UPDATED : அக் 19, 2023 12:00 AM
ADDED : அக் 19, 2023 05:22 PM
சென்னை: பள்ளிகள், கல்லுாரிகள் அருகே பெட்டி கடைகளில் போதைப் பொருட்களை விற்பனை செய்வோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.கள ஆய்வில் முதல்வர் திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட, காவல்துறை உயர் அலுவலர்களுடன், சட்டம்- ஒழுங்கு தொடர்பான ஆய்வுக் கூட்டம், மறைமலைநகரில் நடந்தது.கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
இம்மூன்று மாவட்டங்களும், தொழில் வளர்ச்சி அதிகம் காணக்கூடிய மாவட்டங்கள். குற்ற நிகழ்வுகள் நடப்பதற்கான வாய்ப்புகளும், காரணங்களும் இங்கு அதிகம் உள்ளன. எனவே, காவல்துறை அதிகபட்ச கவனத்துடன் செயல்பட வேண்டும்.விமர்சனம்
சட்டம் - ஒழுங்கை பேணி காத்து, அமைதியான சூழ்நிலை நிலவ, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் காவல்துறை, மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்.கொலை, கொலை முயற்சி, செயின் பறிப்பு ஆகியவை, மக்கள் மத்தியில் அச்சம், சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு குறித்த விமர்சனமும் ஏற்பட காரணமாகிறது. இவ்வகை வழக்குகளில் குற்றவாளிகளை பிடிப்பதோடு, மீண்டும் நடக்காமல், தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.மக்கள் அதிகம் கூடும் இடங்களில், சங்கிலி பறிப்பு போன்ற குற்ற செயல்கள் ஏற்படாமல் இருக்க, கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகள், கல்லுாரிகள் அருகே, பெட்டிக் கடைகளில் போதைப் பொருட்களை விற்போர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவ - மாணவியர் இடையே, போதைப் பொருட்களால் ஏற்படும் கேடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.கண்காணிப்பு
சில இடங்களில், காவல் துறையினருக்கு தெரியாமல், இதுபோன்ற நிகழ்வுகள் நடக்க வாய்ப்பில்லை என, சிலர் கூறி வருகின்றனர். இதை நான் நம்பவில்லை என்றாலும், உயர் அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் புழங்கும் பகுதிகள் கண்டறியப்படும் நிகழ்வுகளில், சம்பந்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த காவல் துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் எவ்விதமான சமரசமும் ஏற்கத்தக்கதல்ல. எங்கள் மாவட்டத்தில், போதைப் பொருள் நடமாட்டம் இல்லை என, ஒவ்வொரு மாவட்ட எஸ்.பி.,யும் உறுதி எடுத்து, தடுத்து காட்ட வேண்டும். இது உங்கள் கடமை.அடுத்து சாலை விபத்துகளை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சாலை மேம்பாடு, சிக்னல்கள் அமைத்தல், தெரு விளக்குகள் அமைத்தல் போன்ற பணிகளை, கலெக்டர்கள் மேற்கொள்ள வேண்டும்.பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டும். சமூக வலைதளங்கள் வழியே, வன்முறை மற்றும் ஜாதிய கருத்துக்களையும், வதந்திகளை பரப்புவோரையும் கண்காணிக்க வேண்டும்.விசாரணை
பொய்யான செய்திகள் குறித்து, பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு மனு மீதும், முறையான விசாரணை செய்ய வேண்டும். வாரந்தோறும் புதன்கிழமை, மாவட்ட போலீஸ் எஸ்.பி., குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்த வேண்டும். காவலர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் வசதிகளை, எஸ்.பி.,க்கள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். பண்டிகை காலங்களில், மக்கள் தடையின்றி பாதுகாப்பாக பயணிக்க, போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும். இவ்வாறு, முதல்வர் பேசினார்.கூட்டத்தில், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, உள்துறை செயலர் அமுதா, டி.ஜி.பி., சங்கர்ஜிவால் மற்றும் அலுவலர்கள், மூன்று மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி.,க்கள் பங்கேற்றனர்.
