ஆயிரம் பள்ளிக் கட்டடங்கள் திறக்க ஏற்பாடு: அமைச்சர் தகவல்
ஆயிரம் பள்ளிக் கட்டடங்கள் திறக்க ஏற்பாடு: அமைச்சர் தகவல்
UPDATED : அக் 26, 2023 12:00 AM
ADDED : அக் 26, 2023 10:14 AM
தேனி:
மாநிலத்தில் தொடக்கப்பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள ஆயிரம் புதிய கட்டடங்கள் இம் மாதம் திறக்கப்பட உள்ளதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தேனியில் தெரிவித்தார்.பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ், கம்பம், போடி, பெரியகுளம் சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார். அல்லிநகரம் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் செயல்படும் மாவட்ட கல்வி அலுவலகங்களில் ஆய்வு செய்தார். பின் வட்டார வள மையத்தில் 9,10 ம் வகுப்பு தமிழ் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பினை சிறிது நேரம் அமர்ந்து கவனித்தார்.அதன்பின் நிருபர்களிடம் கூறியதாவது, தேனி மாவட்டத்தில் சில பள்ளிகளில் வகுப்பறை கட்டடங்கள், கழிப்பறைகள் சேதமடைந்து உள்ளன. தமிழகத்தில் நபார்டு மூலம் ரூ.813 கோடியில் புதிதாக பள்ளி கட்டடங்கள் கட்டும் பணி நடக்கிறது.இம்மாதம் தொடக்கப்பள்ளிகளில் ஆயிரம் புதிய கட்டங்கள் திறக்கப்பட உள்ளது. கட்டிமுடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள கட்டங்கள் குறித்து சி.இ.ஓ.,க்களிடம் அறிக்கை கேட்டுள்ளோம். மைதானம் இல்லாத பள்ளிகளில் மைதானம் அமைக்க ஆய்வுகள் நடந்து வருகிறது. மாணவர்கள் தவறான பாதையில் செல்வதை தவிர்க்க கலைத்திருவிழா, விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.பள்ளி மேலாண்மை குழு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிகள் எடுத்து வருகின்றோம். மாணவர்களிடம் வன்முறை, ஜாதிய பாகுபாடுகளை களைய ஆயிரம் ஆசிரியர்கள் மூலம் ஒருலட்சம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இப்பயிற்சி வழங்கப்பட உள்ளது. என்றார்.
