நீட் விலக்கு மசோதா: ஜனாதிபதியிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
நீட் விலக்கு மசோதா: ஜனாதிபதியிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
UPDATED : அக் 28, 2023 12:00 AM
ADDED : அக் 28, 2023 08:00 AM
சென்னை:
தமிழக அரசின் நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு தாமதமின்றி ஒப்புதல் அளிக்க வேண்டும் என ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக வலியுறுத்தினார்.இந்திய கடல்சார் பல்கலை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க நேற்று முன்தினம் ஜனாதிபதி திரவுபதி முர்மு சென்னை வந்தார். நேற்று விழா முடிந்து டில்லி சென்றார். சென்னை விமான நிலையத்தில் ஜனாதிபதியை வழி அனுப்பும்போது முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார்.அப்போது கோரிக்கை தொடர்பான கடிதத்தையும் அளித்தார். கடிதத்தில் கூறியிருப்பதாவது:
&'நீட்&' தேர்வு அடிப்படையிலான மாணவர் சேர்க்கை ஏழை மற்றும் பின் தங்கிய வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு எதிரானது என்பதால் தமிழகத்தில் பிளஸ் 2 மதிப்பெண்கள் வழியே மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடந்தது.மத்திய அரசு நீட் தேர்வை அறிமுகம் செய்ததாலும் அதைத் தொடர்ந்து மத்திய சட்டங்களில் செய்யப்பட்ட பல்வேறு மாற்றங்களாலும் பிளஸ் 2 மதிப்பெண்கள் வழியே நடந்த சேர்க்கை முறையை நிறுத்தும் நிலை ஏற்பட்டது.நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புகளை ஆராய்ந்து மாற்று வழிகளை செயல்படுத்த தேவையான பரிந்துரைகளை அரசுக்கு வழங்குவதற்காக நீதிபதி ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.இக்குழு அளித்த பரிந்துரை அடிப்படையில் சட்டசபையில் 2021 செப்.13ல் &'தமிழ்நாடு இளநிலை மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை சட்ட முன்வடிவு - 2021&' நிறைவேற்றப்பட்டது.தமிழக கவர்னர் ஐந்து மாதத்திற்கு பின் அந்த சட்டமுன்வடிவை மறு பரிசீலனை செய்யும்படி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார். கடந்த ஆண்டு பிப். 8ல் தமிழக சட்டசபையில் மீண்டும் சட்ட முன்வடிவு நிறைவேற்றப்படடு ஜனாதிபதி ஒப்புதலுக்காக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.கவர்னர் அதை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பினார். இந்த சட்ட முன்வடிவு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை உயர்கல்வித்துறை சுற்றுச்சூழல் துறை கோரிய அனைத்து விளக்கங்களும் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உரிய காலத்திற்குள் வழங்கப்பட்டது. அதன்பிறகும் இந்த விஷயத்தில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.இது தொடர்பாக தங்களுக்கு ஆக. 14ல் கடிதம் எழுதினேன். நீட் விலக்கு தொடர்பான சட்ட முன்வடிவிற்கு ஒப்பதல் அளிப்பதில் ஏற்பட்டுள்ள அதீத காலதாமதம் அதிக கட்டணங்களை செலுத்தி பயிற்சி பெற முடியாத பல தகுதிவாய்ந்த மாணவர்களின் மருத்துவ சேர்க்கையை பறித்துள்ளது.இந்த உணர்வுப்பூர்வமான பிரச்னையில் உடனடியாக தலையிட்டு நீட் விலக்கு தொடர்பான மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
