தினமலர் போட்டி: நாசாவை சுற்றிப்பார்க்க பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு
தினமலர் போட்டி: நாசாவை சுற்றிப்பார்க்க பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு
UPDATED : அக் 28, 2023 12:00 AM
ADDED : அக் 28, 2023 05:08 PM
சென்னை, தினமலர் நாளிதழின் பதில் சொல், அமெரிக்கா செல் என்ற பள்ளி மாணவர்களுக்கான, மெகா வினாடி-வினா போட்டி, நேற்று துவங்கியது.மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், 2018 முதல் இந்த போட்டிகள் நடந்து வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுதும், 500க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்கின்றனர்.இந்தாண்டு, தினமலர் மாணவர் பதிப்பான பட்டம் இதழுடன், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனமும் இணைந்து, முதல் போட்டி, ஊரப்பாக்கம் சங்கரா வித்யாலயா பள்ளியில் நேற்று நடத்தின.ஐந்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும், 1,538 மாணவர்கள் பங்கேற்றனர். சங்கரா வித்யாலயா பள்ளியின் முதல்வர் புவனேஸ்வரி, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி முதல்வர் ரமேஷ், நிர்வாக அதிகாரி ரமேஷ், நாகா கன்ஸ்யூமர் டிவிஷன் தலைவர் பார்கவ் குமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் முன்னிலையில், போட்டி நடந்தது.இறுதியில், 16 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஒரு அணிக்கு, இருவர் என, எட்டு அணிகளாக தேர்வு செய்யப்பட்டனர். இதில், திருவள்ளுவர் அணியை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி கவின்மதி, 8ம் வகுப்பு மாணவி தேவஸ்ரீ ஆகியோர் முதல் பரிசு பெற்றனர்.பாரதியார் அணியை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி பார்கவி, 8ம் வகுப்பு மாணவி நந்தினி, 2ம் பரிசும்; கம்பர் அணியை சேர்ந்த 7ம் வகுப்பு மாணவர் ஜெயசுதாகர், பிளஸ் 2 மாணவி சுவாதிஸ்ரீ 3ம் பரிசும் பெற்றனர்.தேர்வு எப்படி?
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து, முன்பதிவு செய்துள்ள 200க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ - மாணவியர் பங்கேற்க உள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதில் இருந்தும் பங்கேற்று, பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு அரையிறுதி போட்டி நடக்கும். அதில் இருந்து எட்டு அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஜனவரியில் இறுதிப்போட்டி நடைபெறும். இறுதிப்போட்டியில் முதல் இடத்தை பிடிக்கும் இரண்டு மாணவர்களுக்கு, அமெரிக்காவின் நாசாவை சுற்றிப்பார்க்கும் அரிய வாய்ப்பு கிடைக்கும்.இரண்டாம் இடத்தை பிடிக்கும் இரண்டு மாணவர்களுக்கு லேப் - டாப்; மூன்றாம் இடத்தை பிடிக்கும் இரண்டு மாணவர்களுக்கு டேப்லெட்; நான்காம் இடத்தை பிடிக்கும் 10 மாணவர்களுக்கு, ஸ்மார்ட் வாட்ச் பரிசாக வழங்கப்படும். வெற்றி பெற்ற டாப் 25 அணிகளை சேர்ந்த 50 மாணவர்களுக்கு, ஆறுதல் பரிசும், சான்றிதழும் வழங்கப்படும். இந்த நிகழ்ச்சிகளை, தினமலர் நாளிதழுடன், சேவரிட் நிறுவனம் இணைந்து வழங்குகிறது.
