UPDATED : அக் 29, 2023 12:00 AM
ADDED : அக் 29, 2023 10:36 AM
கடலுார்:
கடலுார் தேவனாம்பட்டினம் அரசு கல்லுாரியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இவர்கள் கல்லுாரிக்கு கடலுார் பஸ் நிலையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பஸ் மற்றும் ஷேர் ஆட்டோக்களில் சென்று வந்தனர். இந்நிலையில் கடந்த 11ம் தேதி ஆட்டோ கவிழ்ந்து மாணவர் ஒருவர் இறந்தார்.இதையடுத்து, கல்லுாரி நேரத்தில் கூடுதலாக அரசு பஸ் இயக்க கோரி, மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது மாவட்ட நிர்வாகம் மாணவர்கள் கோரிக்கையை ஏற்று கூடுதல் பஸ் இயக்கப்படும் என உத்தரவாதம் அளித்தனர்.இதை தொடர்ந்து அரசு பஸ்சில் மாணவர்கள் கல்லுாரிக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை மாணவர்கள் கல்லுாரிக்கு செல்ல, பஸ் வராததால், மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே காத்திருந்தனர்.எனவே, நேரத்தில் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதையடுத்து, நேற்று அரசு போக்குவரத்து கழக கடலுார் மாவட்ட பொது மேலாளர் ராஜா, கிளை மேலாளர் கிருஷ்ணன் ஆகியோர், கல்லுாரிக்கு சரியான நேரத்தில் பஸ்கள் இயக்கப்படுகிறதா என, ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது பொதுமேலாளர் ராஜா கூறுகையில், கடலுார் அரசு கல்லுாரிக்கு வழக்கமாக 6 பஸ்கள் இயக்கப்பட்டது. மாணவர் உயிரிழப்பு சம்பவத்திற்கு பிறகு காலை 8:10 முதல் 9:40 மணிக்குள் கடலுார் பஸ் நிலையத்தில் இருந்து 26 பஸ்களும், பகல் 12:30 முதல் 1:30 மணிக்குள் 12 பஸ்கள் கல்லுாரிக்கும், மாலை 4:30 முதல் 5:30 மணிக்குள் கல்லுாரியில் இருந்து பஸ் நிலையத்திற்கு 6 பஸ்கள் இயக்கப்படுகிறது என்றார்.
