வனத்துறை பணிக்கு தகுதியான எம்.எஸ்சி., வன உயிரியல் படிப்பு
வனத்துறை பணிக்கு தகுதியான எம்.எஸ்சி., வன உயிரியல் படிப்பு
UPDATED : அக் 30, 2023 12:00 AM
ADDED : அக் 30, 2023 10:35 AM
வனத் துறையில் உள்ள பணிகளில் சேர்வதற்கு தகுதியாக, எம்.எஸ்சி., வன உயிரியல் படிப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருந்தது. 1992ல் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை பிறப்பித்த அரசாணையின்படி, முதுநிலை வன உயிரியல் மற்றும் வனவியல் பட்டப்படிப்பு முடித்தவர்கள், ரேஞ்சர் எனும் வனச் சரகர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.இந்நிலையில், வன ரேஞ்சர் பணிக்கு தகுதியாக, முன்னுரிமை அளிக்கப்பட்டிருந்த வனவியல் மற்றும் வன உயிரியல் படிப்புகளை, வனத்துறை பணி விதிகளில் இருந்து அரசு நீக்கியது. பின், வனவியல் பட்டப்படிப்பை மட்டும் சேர்த்து, விதிகளில் திருத்தம் கொண்டு வந்தது. ஆனால், முதுநிலை வன உயிரியல் படிப்பை சேர்க்கவில்லை.இதையடுத்து, திருத்த விதியை ரத்து செய்து, வனவியல் பட்டப்படிப்பு உடன் முதுநிலை வன உயிரியல் படிப்பையும், விதிகளில் சேர்க்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் செந்தில்குமார் என்பவர் உள்ளிட்ட, நான்கு பேர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர் எம்.ஆர்.ஜோதிமணியன் வாதாடினார்.நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
வனத்துறை பணி விதிகளில், முதுநிலை வன உயிரியல் படிப்பை சேர்க்காதது, பாரபட்சமானது; அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. குரூப் - 1 பிரிவில், வன உதவி பாதுகாப்பாளர் பதவிக்கு, வனவியலில் பட்டப் படிப்பு மற்றும் வன உயிரியலில் முதுநிலை படிப்புக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. எனவே, வனத்துறை பணி விதிகளில், வனவியல் பட்டப்படிப்பு உடன் வன உயிரியல் முதுநிலை படிப்பையும் சேர்க்க உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
