UPDATED : அக் 31, 2023 12:00 AM
ADDED : அக் 31, 2023 09:46 AM
தர்மபுரி:
அரசு ஊழியர், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி வரும், 15 முதல், 24 வரை, ஊழியர் சந்திப்பு பிரசாரம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.தர்மபுரியில், ஜாக்டோ- ஜியோ மாவட்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுருளிநாதன் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் கவுரன், தமிழ்நாடு தமிழக ஆசிரியர் கழக மாநில இணைச் செயலாளர் ராசா, ஜாக்டோ ஜியோ நிதி காப்பாளர்புகழேந்தி, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் சாமிநாதன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் பழனியம்மாள் உட்பட பலர் பேசினர். இதில், 2003 ஏப்., 1க்கு பின், அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு, தற்போது வழங்கப்பட்டு வரும் பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும். காலவரையின்றி முடக்கி வைத்துள்ள, சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும்.இடைநிலை ஆசிரியர்களுக்கும், உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், முதுகலை ஆசிரியர்களுக்கும், உடற்கல்வி இயக்குனர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதி நீக்கப்பட வேண்டும் என்பன உட்பட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
