UPDATED : நவ 03, 2023 12:00 AM
ADDED : நவ 03, 2023 10:08 AM
கிருஷ்ணகிரி:
மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில், கல்லுாரி மாணவியருக்கு, 15 நாட்கள் தொல்லியல் பயிற்சி நடந்து வருகிறது.கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் கடந்த மாதம், 26 முதல், 15 நாட்களுக்கு, தர்மபுரி சக்தி கைலாஷ் மகளிர் கலைக்கல்லுாரியில் தமிழ் மற்றும் வரலாறு படிக்கும் மூன்றாமாண்டு மாணவியர், 40 பேருக்கு தொல்லியல் குறித்த உள்விளக்க பயிற்சி நடந்து வருகிறது. இதில், வரலாற்றுக்கு முற்பட்ட காலம், இடை வரலாற்று காலம் மற்றும் வரலாற்று காலங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் தமிழி என்று அழைக்கப்படும், 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் பிராமி எழுத்துக்களை எழுதவும், படிக்கவும் கற்று தரப்பட்டது. பின்னர், அவ்வெழுத்திலிருந்து இன்றைய கால தமிழ் வரை எழுத்துக்களின் வளர்ச்சியை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்பட்டது. நேற்று, கல்வெட்டில் படியெடுத்து, அதிலுள்ள எழுத்துக்களை படிக்க கற்றுத்தரப்பட்டது.இனிவரும் நாட்களில், கிரந்த எழுத்துக்கள், தமிழ் எண்கள், கல்வெட்டுகளிலுள்ள ஆண்டுகளை கணக்கிடும் முறை, சிற்பம் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சியை அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் அளித்து வருகிறார். ஏற்பாடுகளை அருங்காட்சியக பணியாளர்கள் செல்வகுமார் மற்றும் பெருமாள் ஆகியோர் செய்து வருகின்றனர்.
