குலசையில் விண்வெளி தொழில் பூங்கா; பணிகளை துவக்க டிட்கோ ஆயத்தம்
குலசையில் விண்வெளி தொழில் பூங்கா; பணிகளை துவக்க டிட்கோ ஆயத்தம்
UPDATED : நவ 05, 2023 12:00 AM
ADDED : நவ 05, 2023 10:18 AM
சென்னை:
குலசேகரன்பட்டினத்தில், இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதள கட்டுமான பணிக்கு, பிரதமர் மோடி அடுத்த மாதம் அடிக்கல் நாட்டுகிறார்.ராக்கெட் தயாரிப்பு, செயற்கைக்கோள் உருவாக்கம், ராக்கெட் ஏவுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய விண்வெளி துறையில், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான, இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. அதேநேரத்தில், விண்வெளி துறையில், தனியார் நிறுவனங்களும் ஈடுபட, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில், இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளம் உள்ளது. அங்கிருந்து, பி.எஸ்.எல்.வி., - ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் உதவியுடன் செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படுகின்றன.எஸ்.எஸ்.எல்.வி., எனப் படும், சிறிய ராக்கெட் உதவியுடன் மிகச்சிறிய, சிறிய செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த, துாத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில், இஸ்ரோ புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்க உள்ளது.இதற்காக குலசேகரன்பட்டினம் அருகில் உள்ள கூடல்நகர் மற்றும் அதை சுற்றிய இடங்களில், 2,300 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. ராக்கெட் ஏவுதளம் கட்டுமான பணிக்கு, பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் அடிக்கல் நாட்டுகிறார். அதன்பின், விண்வெளி துறைக்கு தேவைப்படும் உபகரணங்கள் உற்பத்தியில், பல நிறுவனங்கள் ஈடுபட உள்ளன.இதற்காக, தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனமான, டிட்கோ குலசேகரன்பட்டினம் அருகே, 3,500 ஏக்கரில் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன், விண்வெளி தொழில் பூங்கா மற்றும் ராக்கெட் எரிபொருள் தொழில் பூங்கா அமைக்க உள்ளது. இதற்கான சாத்தியக்கூறு அறிக்கை, இரு மாதங்களில் கிடைக்க உள்ளது. தொடர்ந்து, கட்டுமான பணிகளை விரைவில் துவக்க, டிட்கோ ஆயத்தமாகி வருகிறது.வேலை கிடைக்கும்தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
உலகளவில் சிறிய செயற்கைக்கோள் சந்தை மதிப்பு, 27,000 கோடி ரூபாயாக உள்ளது. இது வரும், 2030ல், ஒரு லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. உலகளவில் இஸ்ரோ மட்டுமே மிக குறைந்த செலவில் செயற்கைக் கோள்களை விண்ணில் நிறுத்தி வருகிறது. இதனால் தான், பல நாடுகளும் இஸ்ரோ வாயிலாக, செயற்கைக்கோள்களை ஏவுகின்றன.குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தால், விண்வெளி துறையில் ஈடுபட்டுள்ள பல நிறுவனங்களும், தமிழகத்தில் தொழில் துவங்கும். குறிப்பாக, குலசேகரன்பட்டினத்தில், ஸ்டார்ட் அப் எனப்படும், புத்தொழில் நிறுவனங்கள் அதிகம் ஈடுபட முனைப்பு காட்டி வருகின்றன. இதற்காக, விண்வெளி தொழில் மற்றும் ராக்கெட் எரிபொருள் தொழிலில் ஈடுபட உள்ள நிறுவனங்களுக்கு உலகத் தரத்தில், குலசேகரன்பட்டினம் அருகில் இரு பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன.இதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணி, கே.பி.எம்.ஜி., என்ற நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது; இரு மாதங்களில் அறிக்கை கிடைக்கும். அதை தொடர்ந்து, விண்வெளி பூங்கா அமைப்பதற்கான அடுத்தகட்ட பணிகளை டிட்கோ துவங்கும். இதனால், பல ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
